உசிலம்பட்டி அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு
உசிலம்பட்டி அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ளது விண்ணகுடி கிராமம். இந்த கிராமத்தின் அருகில் உள்ளது கொடிக்குளம் கிராமம். இந்த 2 கிராமங்களுக்கும் இடைய கடந்த பல வருடங்களுக்கு முன்பு இணைப்பு சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சாலை கண்மாயின் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து போடப்பட்டதாக கூறி பொதுப்பணித்துறையினர், நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் அங்கு சென்றனர்.
இதையறிந்து வந்த கிராமமக்கள், இந்த சாலை 2 கிராமத்திற்கும் இணைப்பு சாலையாகவும், அந்த பகுதியில் உள்ள 100–க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, வாகனம் மூலம் விவசாய பணிகளுக்கான பொருட்களை கொண்டு செல்ல பயன்படும் சாலையாகவும் இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்த சாலையை அகற்றினால் விவசாயப்பணிகள் பாதிப்பதோடு, கிராமங்களின் இணைப்பு சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.
மேலும் இந்த சாலை அகற்றப்பட்டால் அந்த பகுதி கிராமங்களுக்கு பல மைல் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. எந்திரத்தை மறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் கண்மாய் பகுதியை தவிர்த்து, அருகில் உள்ள இடத்தில் கிராமங்களுக்கு சுலபமாக சென்று வரும் வகையில் புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் சாலை அகற்றப்பட்டது.