அணைக்கட்டு அருகே முறைகேடாக தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


அணைக்கட்டு அருகே முறைகேடாக தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Dec 2017 4:15 AM IST (Updated: 30 Nov 2017 11:10 PM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு அருகே முறைகேடாக தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு பஸ்களும் சிறைபிடிக்கப்பட்டன.

அணைக்கட்டு,

அணைக்கட்டு ஒன்றியம் வரதலம்பட்டு ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து கல்லூரி மற்றும் மேல்நிலை கல்வி படிக்க வேலூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மாணவ–மாணவிகள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர்.

வேலூரில் இருந்து வரதலம்பட்டுக்கு விரைவு பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் போன்றவைகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பஸ்கள் ஊருக்குள் வராமல் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெளியே நின்று பயணிகளை ஏற்றி சென்றன. இதுகுறித்து கண்டக்டர்களிடம் கேட்டதற்கு பழைய பஸ் நிறுத்தமாக இருந்த இடம் தனிநபருக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த இடத்தில் இனி பஸ்கள் வராது என கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 8 மணி முதல் அவ்வழியாக வந்த அரசு பஸ்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்ததை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

35 ஆண்டுகளாக புளியமரத்தடி தான் பஸ் நிறுத்தமாக இருந்தது. இப்பகுதி மக்கள் இங்கிருந்துதான் பஸ்சில் பயணம் செய்து வந்தனர். அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபருக்கு வருவாய்த்துறையினர் முறைகேடாக பட்டா வழங்கி உள்ளனர். இங்கிருக்கும் புளியமரத்தை வருவாய்த்துறையினர் ஏலம் விட்டு அந்த பணத்தை ஊராட்சி கணக்கில் வரவு வைத்துள்ளனர்.

அப்படி இருக்கும்போது தனிநபருக்கு எப்படி பட்டா வழங்கினார்கள். அந்த நபர் இந்த இடத்தில் பஸ்சை நிறுத்தக்கூடாது என்று டிரைவரை மிரட்டி உள்ளார். எங்கள் பிள்ளைகள் மற்றும் முதியோர்கள் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் பிடிக்க வேண்டியுள்ளது. ஆகவே முறைகேடாக பட்டா வழங்கியதை ரத்து செய்து விட்டு பழைய இடத்தில் பஸ்கள் வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் அணைக்கட்டு தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் மதிவாணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், மாவட்ட வருவாய் அலுவலர் வரும் வரை சிறை பிடித்த பஸ்களை விடமாட்டோம் என்று கூறினார்கள்.

அதற்கு தாசில்தார் தனிநபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்கிறோம். 100 ஆண்டுகளாக வளர்ந்த புளியமரத்தை வெட்டக்கூடாது என தனிநபருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 5 மணி நேரம் சிறைபிடித்த பஸ்கள் விடுவிக்கப்பட்டது. சாலை மறியலும் கைவிடப்பட்டது.


Next Story