ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு; ஜி.ராமகிருஷ்ணன்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் என்று மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
கோவை,
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கோவையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், பா.ஜனதா, அ.தி.மு.க. தலைமைக்கு நிர்ப்பந்தம் கொடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை தனது கைப்பாவையாக மாற்றிவிட்டது.
பா.ஜனதா அரசு தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக எடுத்த பல முடிவுகளை அ.தி.மு.க. அரசு ஆதரித்து வருகிறது. குறிப்பாக நீட்தேர்வு, கீழடி அகழ்வாராய்ச்சி பணி, மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை பறித்தது, காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்தது, இந்தி, சமஸ்கிருத திணிப்பு, ஜி.எஸ்.டி.யை எதிர்க்காதது என ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் கைப்பாவையாக அ.தி.மு.க. மாறிவிட்டது.
மேலும் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவாக செயல்பட்டு வருவதால், அதை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முயற்சி செய்து வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிட்டாலும், போட்டியிடவில்லை என்றாலும், அ.தி.மு.க.–பா.ஜனதாவுக்கு பாடம் கற்பித்து அந்த கட்சிகளின் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளோம்.
எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து, தி.மு.க. வேட்பாளரை எங்களின் சொந்த மேடையில் இருந்து ஆதரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான கடிதத்தை மு.க.ஸ்டாலினை சந்தித்து கொடுக்க உள்ளோம். தேர்தல் பிரசாரத்துக்கு மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து செல்ல மாட்டோம். நாங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போது எங்கள் மேடையில் தி.மு.க. வேட்பாளரை மட்டும் ஏற்றுவோம்.
ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதால்தான் தேர்தல் நிறுத்தப்பட்டது. எனவே இந்த முறை தேர்தல் நியாயமான முறையில் நடைபெற தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.