எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்க கூடாது என்பது தி.மு.க.வின் எண்ணம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்க கூடாது என்பது தி.மு.க.வின் எண்ணம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Dec 2017 4:30 AM IST (Updated: 1 Dec 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வினர் கேவலமான அரசியல் செய்வதுடன், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்க கூடாது என்பது அவர்களின் எண்ணம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அனுமதி பெற்றே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோர்ட்டின் உத்தரவுகள் மீறப்படவில்லை. உரிய அனுமதி பெற்று இருந்தாலும் 14 இடங்களில் வரவேற்பு வளைவுகள் வைப்பதை நிறுத்தி விட்டோம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்க கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் கேவலமான அரசியல் செய்கிறார்கள்.

என்ஜினீயர் ரகுபதி லாரி மோதிய விபத்திலேயே இறந்துள்ளார். அலங்கார வளைவுக்கும், ரகுபதியின் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லை. அவரது மரணம் எங்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க கூடாது என்பது தி.மு.க.வின் எண்ணம். தி.மு.க.வினர் இதை வைத்து அரசியல் செய்கின்றனர். தி.மு.க. ஆட்சியின்போது கோவையில் செம்மொழி மாநாடு நடந்தது. அப்போது சாலையை பாதி அடைத்தபடி அலங்கார வளைவு மற்றும் மேடைகளை அமைத்து இருந்தனர். எங்களை பொறுத்தவரை அலங்கார வளைவுகள் அமைப்பது முக்கியமில்லை.

கோவையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர், துணை முதல்– அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். கோவை மாவட்டத்துக்கு தேவையான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கப்படுவதுடன், புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட உள்ளன.

மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்ய, கன்னியாகுமரி மட்டுமின்றி சென்னை, திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் மேற்பார்வையில் உரிய நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ள வ.உ.சி. மைதானத்தில் இறுதிக்கட்ட விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், ஆர்.கனகராஜ், எட்டிமடை சண்முகம் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story