விருத்தாசலம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மின்கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
விருத்தாசலம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மின்கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் போலீஸ்காரர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருத்தாசலம்,
திட்டக்குடியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 60), விவசாயி. இவர் விருத்தாசலம் அருகே உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வரும் தனசேகர்(45), ராஜேந்திரன் மற்றும் பாஸ்கர், பழனிமுத்து ஆகியோருடன் ஒரு காரில் நேற்று காலை விருத்தாசலத்துக்கு புறப்பட்டு சென்றார். காரை ராஜா என்பவர் ஓட்டினார்.
பின்னர் அவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, அதே காரில் மீண்டும் திட்டக்குடிக்கு புறப்பட்டனர். விருத்தாசலத்தை அடுத்த புறவழிச்சாலையில் ஆலிச்சிக்குடி அருகே சென்றபோது, சாலையில் குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்று கிடந்தது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் ராஜா காரை திருப்பினார்.
அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கருப்பையா, தனசேகர், பாஸ்கர், பழனிமுத்து ஆகிய 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் ராஜேந்திரன், டிரைவர் ராஜா ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் மோதியதில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.