குமரி மாவட்டத்துக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும்; அமைச்சர் உதயகுமார் பேட்டி


குமரி மாவட்டத்துக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும்; அமைச்சர் உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 30 Nov 2017 11:00 PM GMT (Updated: 30 Nov 2017 7:11 PM GMT)

குமரி மாவட்டத்துக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. ஏராளமான மின் கம்பங்களும் கீழே விழுந்து மின்கம்பிகள் அறுந்து தொங்குவதால் மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நேற்று குமரி மாவட்டம் வந்தார்.

பின்னர் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதுவரை விழுந்துள்ள மரங்களில் 200–க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மரம் விழுந்து வீடுகளும் சேதம் அடைந்து இருக்கிறது. உயிர் இழப்பு, பொருள் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இத்தகைய சேதங்களை கணக்கெடுப்பதற்காக குழு அமைக்கப்பட்டிருக்கிறது. சேதமடைந்த மின் கம்பிகளை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகின்றது.

குக்கிராமங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 10 முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. முகாம்களில் 825 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் உணவு வசதி ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. சூறைக்காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டு இருப்பதால் குமரி மாவட்டத்துக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

குமரி மாவட்ட நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை. ஆனால் அதிக தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. எனவே எந்த பிரச்சினையும் இல்லை. வேலூரில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வருகிறார்கள். குமரியில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு இருக்கிறது. எனவே பாதிப்பு குறித்த தகவல்களை 1070, 1077 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புயல் குமரி கடல் பகுதியை விட்டு வெகு தூரம் சென்றுள்ளது. ஆனால் மழை அதிகமாக பெய்யும்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம். பொய் தகவல்களை பரப்புபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். விளை நிலங்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து சேதம் அடைந்த பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளை அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பிறகு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்த்து நலம் விசாரித்ததோடு அவர்களுக்கு உணவும் வழங்கினார். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story