சிறுமி உயிருடன் எரித்துக் கொலை உறவுக்கார பெண் கைது


சிறுமி உயிருடன் எரித்துக் கொலை உறவுக்கார பெண் கைது
x
தினத்தந்தி 1 Dec 2017 5:40 AM IST (Updated: 1 Dec 2017 5:39 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே கள்ளத்தொடர்பை வெளியே கூறிவிடுவாள் என பயந்து சிறுமியை உயிருடன் எரித்துக்கொன்ற உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்தார்கள்.

பெங்களூரு,

பெலகாவி மாவட்டம் பைலமங்களா தாலுகா தொட்டவாட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹிரேபெள்ளிஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா பட்டீல். இவரது மனைவி ரேணுகா. இந்த தம்பதிக்கு 5 வயதில் ராஜேஸ்வரி என்ற மகள் இருந்தாள். சிவப்பாவும், ரேணுகாவும் கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் 2 பேரும் வேலைக்கு சென்றிருந்தார்கள். இந்த நிலையில், வீட்டின் பின்புறத்தில் இருந்து உடலில் தீ எரிந்தபடி சிறுமி ராஜேஸ்வரி ஓடிவந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக ராஜேஸ்வரி உடலில் பிடித்து எரிந்த தீயை அணைத்தார்கள்.

பின்னர் உடல் கருகி நிலையில் உயிருக்கு போராடிய சிறுமியை பைலமங்களா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்து விட்டாள். இதுகுறித்து தொட்டவாட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சிறுமியை உயிருடன் எரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் சிறுமியை, அவளது நெருங்கிய உறவினரான நிர்மலா என்பவர் தான் கொலை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து, நிர்மலாவை கைது செய்து தொட்டவாட் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது நிர்மலாவுக்கு, ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அந்த வாலிபருடன் நிர்மலா நெருக்கமாக இருப்பதை சிறுமி ராஜேஸ்வரி பார்த்துள்ளாள்.

இதனால் தனது கள்ளத்தொடர்பை ராஜேஸ்வரி வெளியே சொல்லி அம்பலப்படுத்தி விடுவாள் என்று நிர்மலா பயந்துள்ளார். பின்னர் ராஜேஸ்வரியை வீட்டின் பின்புறத்துக்கு அழைத்து சென்று நிர்மலா அடித்து, உதைத்துள்ளார். அதன்பிறகு, அவளது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டு நிர்மலா தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது.

கைதான நிர்மலா மீது தொட்டவாட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் பைலமங்களாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story