பாபநாசத்தில் ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டியது மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு


பாபநாசத்தில் ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டியது மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 2 Dec 2017 2:30 AM IST (Updated: 1 Dec 2017 7:18 PM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டியது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது.

நெல்லை,

பாபநாசத்தில் ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டியது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. அதுவும் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு, நம்பியாறு அணைகள் நிரம்பின. குண்டாறு அணை கடந்த சில நாட்களுக்கு முன்பே நிரம்பி மறுகால் பாய்ந்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது.

பாபநாசத்தில் 45 செ.மீ. மழை

நேற்று முன்தினம் பெய்த மழையில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 17 அடி உயர்ந்தது. அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் 121.5 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 10 அடி உயர்ந்து 131.10 அடியாக அதிகரித்தது. அணைப்பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 451 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரத்து 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் 12 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டது.

இதேபோன்று மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 100 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 104.25 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 378.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைக்கு 14 ஆயிரத்து 155 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

சேர்வலாறு–ராமநதி அணை

சேர்வலாறு அணைப்பகுதியில் 192 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் 147.14 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளமாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது.

ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 74 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. அணை அதன் முழு கொள்ளளவை எட்ட இன்னும் 2 அடியே தேவைப்படும் நிலையில், அணைக்கு 592.75 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அது அப்படியே வெளியேற்றப்பட்டது.

கடனாநதி–நம்பியாறு

கடனாநதி அணை நேற்று முன்தினம் தனது முழு கொள்ளவையும் எட்டி உள்ளது. அணைக்கு 7 ஆயிரத்து 385 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

இதுதவிர நம்பியாறு அணையும் நேற்று முன்தினம் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு 4 ஆயிரத்து 895 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

கொடுமுடியாறு அணை

கொடுமுடியாறு அணை நேற்று முன்தினம் தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்த அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 650 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி அணையும் நிரம்பி வழிந்தது. இதனால் அணைக்கு வரும் 1,450 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 34 அடியாக இருந்தது. இருந்தது. நேற்று காலை நிலவரப்படி 4 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 38 அடியானது. அணைக்கு 3 ஆயிரத்து 823.52 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 90.50 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 105 அடியானது. அணைக்கு 412 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மழை விவரம்

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு:–

பாபநாசம்–451, மணிமுத்தாறு–378, சேர்வலாறு–192, தென்காசி–169, கடனாநதி–160, அடவிநயினார்–145, கொடுமுடியாறு–142, குண்டாறு–139, செங்கோட்டை–121, ஆய்குடி–120, அம்பை–103, ராதாபுரம்–94, ராமநதி–92, சங்கரன்கோவில்–90 கருப்பாநதி–75, நாங்குநேரி–66, சேரன்மாதேவி–62, பாளையங்கோட்டை–50, நெல்லை–46.


Related Tags :
Next Story