மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை கவிழ்க்கும் எண்ணத்துடன் செயல்படுகிறார் முதல்–அமைச்சர் குற்றச்சாட்டு
மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை கவிழ்க்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறினார்.
கோவை,
மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை கவிழ்க்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வருகிற 6–ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறினார்.
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் நேற்று மாலை 6.30 மணிக்கு வந்தார். விமான நிலையத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, முன்னாள் எம்.பி.தியாகராஜன், ஏ.கே.செல்வராஜ் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மின்சார துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் அங்கு சென்று நேரடி ஆய்வு செய்து வருகின்றனர். புயல் காரணமாக 3 ஆயிரத்து 750 மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. இதனை சரி செய்யும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர ஏராளமான மரங்களும் சாய்ந்து உள்ளன.
கன்னியாகுமரியில் கடலுக்கு மீன்பிடிக்க 29 படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர். இதில் 18 படகுகளில் சென்ற மீனவர்கள் திரும்பி வந்துள்ளனர். 11 படகுகளில் சென்ற 30 மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இவர்களை கடலோர காவல் படையின் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தேவையான நிவாரண பணிகள் மேற்கொள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மழை சேத பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் அறிந்து நிவாரண பணிகள் மேற்கொள்ள வசதியாக கன்னியாகுமரியில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் அதுபோன்ற வீண் வதந்திகளை பரப்பி வருகிறவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது போன்று வீண் வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மழைக்காலங்களில் மழைநீர் கடலில் சென்று கலக்காமல் இருக்க 3 ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.350 கோடி அளவுக்கு ஆறுகளின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. வள்ளியூர் அருகே திருக்குறுங்குடி நம்பியாற்றின் குறுக்கே 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் தற்போது பெய்த பலத்த மழையில் உடைந்துள்ளது. 2 ஆண்டில் பாலம் உடைந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளேன்.
டி.டி.வி. தினகரன் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளது குறித்து நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்னனென்ன சின்னங்கள் ஒதுக்க வேண்டும் என கேட்பது அவர்களின் சொந்த விருப்பம். டி.டி.வி. தினகரன் ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று அதிக ஆர்வம் காட்டினார். மேலும் இதற்காக தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது இரு அணிகளும் இணைந்து விட்டோம். ஆனால் அவர் என்ன செய்கிறார் என்பது உங்களுக்கே தெரியும்.
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் பதவி ஏற்றதும் இந்த ஆட்சி ஒரு மாதம், 2 மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று கூறினார். பின்னர் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார். அதுவும் முடியவில்லை. பின்னர் மானியக்கோரிக்கையின் போது கலைத்து விடலாம் என்று நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. இந்த அரசை எப்படியாவது கவிழ்த்து விடலாம் என்ற எண்ணத்திலேயே தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
அவரின் எண்ணங்களை பொய்யாக்கி நாங்கள் கடந்த 10 மாதங்களாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். மேலும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். இதனால் எங்கள் மீது மு.க.ஸ்டாலினால் எவ்வித குற்றங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் விரக்தியின் விளிம்புக்கு சென்ற அவர் எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
கோவை என்ஜினீயர் ரகுபதி மரணம் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அவரின் மரணத்தை வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகிறது. கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் போது தி.மு.க.வினர் சாலைகளை மறித்து அலங்கார வளைவுகள் வைத்தது அனைவருக்கும் தெரியும். நாங்கள் எவ்விதத்திலும் விதிமுறைகளை மீறவில்லை. என்ஜினீயர் ரகுபதி லாரி மோதி தான் இறந்தார். அவர் சாவுக்கு அலங்கார வளைவு காரணம் இல்லை. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவு எங்களிடம் உள்ளது. இதனை நாங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்வோம். கோர்ட்டு அறிவித்தால் அந்த பதிவுகளை வெளியிட தயாராக உள்ளோம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கு அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவர் இந்த மண்ணின் மைந்தன். ஆர்.கே.நகர் அ.தி.மு.க. கோட்டையாகும். இங்கு மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாங்கள் ஆர்.கே. நகரில் வருகிற 6–ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளோம்.
இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.