பெருந்துறை அருகே மிளகாய் வியாபாரி மர்ம சாவு
பெருந்துறை அருகே மிளகாய் வியாபாரி மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
பெருந்துறை,
பெருந்துறை சிப்காட் அருகே உள்ள ஓடைக்காட்டூர் என்ற இடத்தில் ஒதுக்குப்புறமான பகுதியில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது. அந்த பகுதி மக்கள் அதை பார்த்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் சின்னத்தம்பி பாளையத்தை சேர்ந்த மிளகாய் வியாபாரி சாமிநாதன் (வயது 68) என்பது தெரியவந்தது. சின்னத்தம்பிபாளையத்தை சேர்ந்தவர்களை அங்கு வரவழைத்து போலீசார் அதை உறுதி செய்தார்கள். அதன்பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
வாரச்சந்தைகளுக்கு சென்று மிளகாய் வியாபாரம் செய்து வந்த சாமிநாதனின் மனைவி 35 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருடைய மகள் மாலதி திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். அதனால் தனியாக வசித்து வந்த சாமிநாதன் நேற்று முன்தினம் 12 மணியளவில் வீட்டில் இருந்து மொபட்டில் வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடுதிரும்பவில்லை.
சாமிநாதன் ஓடைக்காட்டூருக்கு ஏன் வந்தார்? எப்படி இறந்தார்? விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து உடலை அங்கு கொண்டு வந்து போட்டார்களா? என்று தெரியவில்லை. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.