திருப்பதியில் அனாதையாக விடப்பட்ட அருப்புக்கோட்டை மூதாட்டி தற்கொலை செய்து கொள்ள தூக்க மாத்திரை கேட்கிறார்


திருப்பதியில் அனாதையாக விடப்பட்ட அருப்புக்கோட்டை மூதாட்டி தற்கொலை செய்து கொள்ள தூக்க மாத்திரை கேட்கிறார்
x
தினத்தந்தி 2 Dec 2017 4:00 AM IST (Updated: 2 Dec 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் திருப்பதியில் அனாதையாக விடப்பட்டார். அவர், தற்கொலை செய்து கொள்ள சாலை ஓரம் செல்பவர்களிடம் தூக்க மாத்திரைகளை கேட்கிறார்.

ஸ்ரீகாளஹஸ்தி,

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த புளியம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி ரத்தினவள்ளி (வயது 70). இவர்களுக்கு 4 மகன்கள் உண்டு. அதில் ஒரு மகன் சிறுவயதிலேயே மரணம் அடைந்து விட்டார். நாகராஜ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

ரத்தினவள்ளி, தன்னுடைய இளையமகன் மாதவனிடம் வசித்து வந்தார். மாதவனும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மற்ற இரு மகன்களான அசோகன், கணேசன் ஆகியோரில் யாரோ ஒருவர் பெற்ற தாய் என்றும் கூட பார்க்காமல் ரத்தினவள்ளியை திருப்பதிக்கு அழைத்து வந்து அனாதையாக விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. திருப்பதி கபிலத்தீர்த்தத்தை அடுத்த கபிலேஸ்வரசாமி கோவில் அருகே சாலை ஓர நடைமேடையில் தங்கி ரத்தினவள்ளி பிச்சை எடுத்து வருகிறார்.

அவர் தற்போது நடக்க முடியாத நிலையில் உள்ளார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், சாலையில் செல்வோரிடம் தற்கொலை செய்து கொள்ள தூக்க மாத்திரைகளை வாங்கி தரும்படி கேட்டு வருகிறார். வயது முதிர்ந்த ரத்தினவள்ளியை தன்னார்வ தொண்டு அமைப்பினரோ அல்லது அவருடைய மகன்களோ அழைத்துச் சென்று பராமரிக்கலாம் எனப் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

திருப்பதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் ரத்தினவள்ளியின் மகன் கணேசனிடம் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் தெரிவித்த விவரம் வருமாறு:–

எங்கள் ஊரில் நான் சிறிய அளவில் கடை நடத்தி வருகிறேன். நான் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் என்னுடைய அம்மாவை (ரத்தினவள்ளி) சேர்த்தோம். ஆனால் அவர், இருந்த இடத்திலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருகிறார் எனக்கூறி, அந்த இல்லத்தில் சேர்த்த நான்கு நாட்களிலேயே அவர்கள் மீண்டும் அழைத்து வந்து எங்கள் அம்மாவை வீட்டில் விட்டு விட்டனர்.

என்னுடைய அண்ணன் அசோகன் சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் உள்ளார். அவர் தான் எங்கள் அம்மாவை கடந்த சில நாட்களாக வீட்டில் வைத்து சாப்பாடு போட்டு பராமரித்து வந்தார். பின்னர் எங்கள் அம்மா ரத்தினவள்ளியை திருப்பதியில் அனாதையாக விட்டு விட்டதாக என்னுடைய அண்ணன் எனக்கு தகவல் தெரிவித்தார். என்னால் எங்கள் அம்மாவை பார்த்துக் கொள்ள முடியவில்லை. நாங்களும் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story