கூட்டு சிகிச்சையால் மட்டுமே எய்ட்சை கட்டுப்படுத்த முடியும்


கூட்டு சிகிச்சையால் மட்டுமே எய்ட்சை கட்டுப்படுத்த முடியும்
x
தினத்தந்தி 1 Dec 2017 10:00 PM GMT (Updated: 1 Dec 2017 8:29 PM GMT)

கூட்டு சிகிச்சையால் மட்டுமே எய்ட்சை கட்டுப்படுத்த முடியும் என்று கலெக்டர் ராமன் பேசினார்.

வேலூர்,

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ்தினம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு மனிதசங்கிலியில் மாணவிகளுடன் கலெக்டர் ராமன் கைகோர்த்து நின்றார். அதைத்தொடர்ந்து விழிப்புணர்வு அரங்கத்தையும் அவர் திறந்து வைத்தார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு திட்ட மேலாளர் டாக்டர் ஆனந்தசித்ரா வரவேற்றார். தொடர்ந்து கலெக்டர் உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதன்பின்னர் கலெக்டர் பேசியதாவது:–

மனிதகுலத்தின் மிகப்பெரிய சவாலாக இருப்பது எய்ட்ஸ் நோய். இந்தியாவில் 0.27 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருக்கலாம் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த கொடிய அரக்கனை மனிதகுலத்தில் இருந்து விரட்டியடிக்க டாக்டர்களும், செவிலியர்களும் கடமையாக நினைக்காமல், சேவையாக செய்து வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் சி.எம்.சி. ஆகிய இடங்களில் கூட்டு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. யாருக்காவது எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு உடனடியாக கவுன்சிலிங் வழங்கவேண்டும். கூட்டு சிகிச்சையால் மட்டுமே எய்ட்சை கட்டுப்படுத்த முடியும். மனித சமுதாயத்தில் இருந்து எய்ட்ஸ் நோயை விரட்டியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து சிறப்பாக சேவையாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் லலிதா, நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, அரசு மருத்துவமனை டாக்டர் அன்பரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பத்தூர் கூட்டு சிகிச்சை மைய மருத்துவ அலுவலர் சுவேதா நன்றி கூறினார்.


Next Story