4 மாணவிகள் தற்கொலை சம்பவம்: அரசின் நிவாரணத்தை வாங்க பெற்றோர்கள் மறுப்பு சம்பந்தப்பட்ட ஆசிரியைகளை கைது செய்ய கோரிக்கை


4 மாணவிகள் தற்கொலை சம்பவம்: அரசின் நிவாரணத்தை வாங்க பெற்றோர்கள் மறுப்பு சம்பந்தப்பட்ட ஆசிரியைகளை கைது செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2017 5:00 AM IST (Updated: 2 Dec 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வழங்கிய ரூ.2 லட்சம் நிவாரண தொகையை மாணவிகளின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.

வேலூர்,

4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வழங்கிய ரூ.2 லட்சம் நிவாரண தொகையை மாணவிகளின் பெற்றோர் வாங்க மறுத்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியைகளை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மனிஷா, ரேவதி, தீபா, சங்கரி ஆகியோர் கடந்த 24–ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நிவாரண தொகை வழங்குவதற்காக 4 மாணவிகளின் பெற்றோரை நெமிலி தாசில்தார் பாஸ்கரன் மற்றும் போலீசார் அழைத்துக் கொண்டு ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.

மாணவிகளின் தற்கொலை குறித்து அங்கு பெற்றோரிடம் உதவி கலெக்டர் வேணு சேகரன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அப்போது நிவாரண தொகையை பெற்றோர்கள் வாங்க மறுத்ததாக தெரிகிறது.

இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கூறியதாவது:–

ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் வேணுசேகரன் எங்களிடம் அரசின் ரூ.2 லட்சம் நிவாரண தொகையை காசோலையாக தந்தார். நாங்கள் அதை ஏற்க மறுத்து விட்டோம். எங்களது குழந்தைகளின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை விடுத்தோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் நிவாரண தொகையை பெற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி உதவி–கலெக்டர் வேணுசேகரன் கூறுகையில், ‘மாணவிகளின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்’ என்றார்.


Next Story