புதுவை மாநிலத்தில் கனமழை குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது; நெற்பயிர்கள் சேதம்
புதுவை மாநிலத்தில் கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
பாகூர்,
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் புதுவை மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. பாகூர், அரியாங்குப்பம், திருக்கனூர், வில்லியனூர், ஏம்பலம் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
நேற்று காலையிலும் புதுவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக கிராமப்புறங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
அரியாங்குப்பம் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். குடியிருப்பு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதால் அலுவலக ஊழியர்கள், குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சிரமப்பட்டனர். இப்பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் படகுகள் இயக்கப்படவில்லை.மதிகிருஷ்ணாபுரம் பகுதியில் ஓரிரு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
புதுவை மாநிலத்தில் உள்ள கோர்க்காடு, புதுக்குப்பம், ஏம்பலம், கரிக்கலாம் பாக்கம், உறுவையாறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன.பாகூர் பகுதியிலுள்ள 23 ஏரிகளும் நிரம்பின.பகுதியில் பகுதியில் 25 மி.மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.