தேர்வறைக்கு தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்
பொதுத்தேர்வின் போது தேர்வறைக்கு தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநில கல்வி வாரியம் அதிரடியாக அறிவித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில கல்வி வாரியம் பொதுத்தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு 12–ம் வகுப்பு தேர்வின் போது கேள்வித்தாள்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வரும் பொதுத்தேர்வில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக மாநில கல்வி வாரியம் பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகளை பிறப்பித்து உள்ளது.தேர்வு தொடங்கிய நேரத்தில் இருந்து அரை மணி நேரம் வரை தாமதமாக தேர்வறைக்கு வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் நடைமுறை இருந்தது.
இந்தநிலையில் கல்வி வாரிய உத்தரவின்படி, வரும் பொதுத்தேர்வில் இந்த நடைமுறை பின்பற்றப்படாது. தேர்வு தொடங்கிய பின்னர் தாமதமாக தேர்வறைக்கு வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே இனி மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வறையில் இருக்க வேண்டியது அவசியம்.இதேபோல மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கிய 1 மணி நேரத்தில் விடைத்தாளை கொடுத்து விட்டு செல்ல முடியும். ஆனால் இனி மாணவர்கள் அவ்வாறு தேர்வறையில் இருந்து செல்ல முடியாது. முன்கூட்டியே தேர்வை எழுதி முடித்து இருந்தாலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நேரம் முடியும் வரை தேர்வறைக்குள் தான் இருக்கவேண்டும்.
கேள்வித்தாள் வெளியாகும் சம்பவங்களை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கல்வி வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story