ஊத்துக்கோட்டையில் அரசு பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவிகள் அவதி
ஊத்துக்கோட்டையில் அரசு பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1,000 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி தாழ்வான பகுதியில் உள்ளதால் சிறு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்குகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பள்ளிக்குள் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
முழங்கால் அளவுக்கு உள்ள மழை நீரை தாண்டி கொண்டு மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.
மழைநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் வகுப்பறைகளுக்குள் வந்து செல்வதாக மாணவிகள் அச்சத்துடன் தெரிவித்தனர். கல்வித்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.