30 ஆண்டுகளாக தோல்வியைச் சந்திக்காத கதாநாயகன்


30 ஆண்டுகளாக தோல்வியைச் சந்திக்காத கதாநாயகன்
x
தினத்தந்தி 2 Dec 2017 7:25 AM GMT (Updated: 2 Dec 2017 7:25 AM GMT)

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் திரையுலகில் 36 வருடங்களை வெற்றிகரமாக கடந்திருக்கிறார்.

லகளவில் அதிகம் சம்பாதிக்கும் ஹாலிவுட் நடிகர்களில் ஒருவர், டாம் குரூஸ். உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டவர் என்ற பெருமைக்கும் இவர் சொந்தக்காரர்.

1981-ம் ஆண்டில், நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்த டாம் குரூஸ், திரையுலகில் 36 வருடங்களை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மம்மி’ திரைப்படம் உலகமெங்கும் வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. டாம் குரூஸைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

1962-ம் வருடம் ஜூலை மாதம் 3-ந் தேதி பிறந்த டாம் குரூஸ், தனது 19 வயதில் ‘என்ட்லஸ் லவ்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். 1983-ம் ஆண்டு வெளிவந்த ‘லாஸின் இட்’ திரைப்படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்த டாம் குரூஸ், அதே ஆண்டு வெளிவந்த ‘ரிஸ்கி பிசினஸ்’ மூலம் ஹாலிவுட்டின் வசூல் நாயகனாக உயர்ந்தார். 1988-ம் ஆண்டு வெளியான ‘ரெயின்மேன்’ திரைப்படம் 25 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் 355 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது டாம் குரூஸின் அந்தஸ்தை உலகளவில் உயர்த்திப் பிடித்தது.

1996-ம் ஆண்டு வெளிவந்த ‘மிஷன் இம்பாஸிபிள்’ திரைப்படம் முரட்டு ஆக்‌ஷன் நாயகனாக, டாம் குரூஸை உலகத்திற்கு வெளிப்படுத்தியது. 80 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், உலகமெங்கும் 457.7 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை புரிந்தது. ‘மிஷன் இம்பாஸிபிள்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இதுவரை 5 பாகங்கள் வெளிவந்து விட்டன. ஆனால் ஒவ்வொரு முறையும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர, சற்றும் குறையவில்லை.

டாம் குரூஸ் நடிக்க வந்த இந்த 36 வருடங்களில், ‘மிஷன் இம்பாஸிபிள்’ உள்ளிட்ட ஆக்‌ஷன் படங்களையும் சேர்த்து, சுமார் 48 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த டாம் குரூஸ், நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்த பின்பு இந்த 30 வருடங்களில் ஒரு தோல்வியைக் கூட சந்தித்தது கிடையாது. சில படங்கள் வசூலில் சற்று குறைந்தாலும், டாம் குரூஸின் வெற்றியை உறுதிபடுத்தின. 

Next Story