‘தாய்மண்’ திரும்பிய எலும்புக்கூடு


‘தாய்மண்’ திரும்பிய எலும்புக்கூடு
x
தினத்தந்தி 2 Dec 2017 7:53 AM GMT (Updated: 2 Dec 2017 7:53 AM GMT)

ஆஸ்திரேலியாவில், பூர்வகுடியைச் சேர்ந்த ஓர் எலும்புக் கூடு, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சொந்த மண்ணுக்குத் திரும்பியிருக்கிறது.

ஸ்திரேலிய பூர்வகுடியைச் சேர்ந்த மனித எலும்புக்கூடு, பத்தாண்டுகளுக்கு மேலாக கான்பெர்ரா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

‘மங்கோ மேன்’ என்று அழைக்கப்படும் இந்த எலும்புக்கூடு, நியூ சவுத் வேல்சில் உள்ள அவரின் பாரம்பரிய இடத்துக்கு சமீபத்தில் மரியாதையோடு கொண்டுவரப்பட்டது.

மங்கோ மேனை அவரின் சொந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என பல ஆண்டுகளாகப் போராடிய ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் போராட்டம் இதன்மூலம் முடிவுக்கு வந்தது.

கடந்த 1974-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு, ஆஸ்திரேலியாவின் வரலாற்றையே மாற்றி எழுதக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதிகால ஆஸ்திரேலியர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதை மறுவரையறை செய்யும் வகையில் இந்த எலும்புக்கூடு இருந்தது என ஆய்வுகள் கூறுகின்றன.

மேற்கு சிட்னியிலிருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ள, மங்கோ தேசியப் பூங்காவின் ஏரிக்கரையில், ஜிம் பவுலர் என்பவரால் இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோன்று, ‘மங்கோ லேடி’ என்று குறிப்பிடப்படும் பெண்ணின் எலும்புக்கூட்டையும் பவுலர் 1967-ம் ஆண்டு கண்டுபிடித்திருக்கிறார்.

ஆய்வு செய்வதற்காக மங்கோ மேனின் எலும்புக்கூடு கான்பெர்ராவில் உள்ள தேசியப் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அது 42 ஆயிரம் ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு என்றும், ஆஸ்திரேலியாவில் உள்ள மனித எலும்புக்கூடுகளிலேயே பழமையானது அதுதான் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

மங்கோ மேன் ஒரு வேடன் என்றும், மூட்டு வீக்கம் காரணமாக சுமார் 50 வயதில் அவர் இறந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

முதுகு தரையில் உள்ளபடி, அவரின் இரு கைகளும், இரு தொடைகளின் குறுக்கே உள்ளது போல அவர் புதைக்கப் பட்டுள்ளார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், அவரின் எலும்புக்கூடு அங்கு புதைக்கப்பட வேண்டும் என பல காலங் களுக்கு முன்பு கூறியதோடு, அவரின் எலும்புகளை அங்கிருந்து நீக்கியது பெரிய மனவருத்தத்தை உருவாக்குவதாகத் தெரிவித்திருந்தனர்.

தற்போது மீண்டும் அப்பகுதியில் மங்கோ மேனின் எலும்புக் கூடு புதைக்கப்படும் நிகழ்ச்சிக்காக, முத்தி முத்தி, கியம்பா மற்றும் பர்கண்ட்ஜீ ஆகிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

‘அவரது எலும்புக்கூட்டை மீண்டும் இங்கு கொண்டு வர நாங்கள் அனைவரும் காத்திருந்தோம். அவரின் எலும்புக்கூடு இங்கு வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி, அவருக்கு மீண்டும் அவரின் ஊரிலேயே சமாதி அமைக்கவேண்டும்’ என்றனர்.

மங்கோ தேசியப் பூங்காவில் ஒரு ரகசிய இடத்தில் அவர் புதைக்கப்படவிருக்கிறார். மங்கோ லேடியின் எலும்புக்கூடு 1991-ல் அங்கு கொண்டுவரப்பட்டது.

2015-ம் ஆண்டே மங்கோ மேனின் எலும்புக்கூட்டை மக்களுக்கு அளிப்பதாக உறுதி தெரிவித்த கான்பெர்ரா பல்கலைக்கழகம், பூர்வகுடி பகுதியிலிருந்து அவரது பூத உடலைத் தோண்டி எடுத்ததற்காக பூர்வகுடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு பேட்டியளித்த ஆய்வாளர் ஜிம் பவுலர், ‘மங்கோ மேனின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது என்று அறிவிக்கப்பட்டவுடன், அபோர்ஜினல் மக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, தங்களின் அனுமதி இல்லாமல் அவ்வாறு எடுத்திருக் கக்கூடாது என்றும் கூறினார்கள்’ என்றார்.

அவரின் எலும்புக்கூட்டை திருப்பி அனுப்பும் பணிகள் முடிந்தநிலையில், இரண்டு ஆண்டுகளாக அந்த எலும்புக்கூடு கான்பெர்ராவில் உள்ள தேசிய அருங் காட்சியகத்திலேயே வைக்கப்பட்டிருந்தது.

மங்கோ மேனின் எலும்புகளோடு சேர்த்து வேறு 104 பேரின் எலும்புக்கூடுகளும் சமீபத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அபோர்ஜினல் மக்களை பொருத்தவரை, மூதாதையர்களின் உடல் மிச்சங்களை கண்டெடுப்பது அவர் களுக்கு வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது.

எலும்புக்கூடுகளை திரும்பக் கொண்டுவருவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள், மக்களின் அனுமதி இல்லாமல் இன்னும் பல எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை திரும்ப அளிக்கப்படவில்லை என்றும் கூறினர். சில எலும்புக்கூடுகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஜூலை மாதம், அபோர்ஜினல் மக்கள் ஆஸ்திரேலியாவில் 65 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்கின்றனர் என்பதை நிரூபிக்கும் முதல் தடயத்தை அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். 

Next Story