உயிர்களைக் குடிக்கும் ‘வெந்நீர் நதி’!
தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டில், அமேசான் காட்டுக்குள் ஒரு வெந்நீர் நதி ஓடுகிறது என்ற கருத்து பல நூற்றாண்டுகளாக நிலவி வந்தது.
பெருவில் நிலவும் கதைகளின்படி, ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ஒரு சிறிய குழு அமேசான் மழைக்காடுகளில் நிறையத் தங்கம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, அதை எடுக்க உள்ளே சென்றது.
அப்படிச் சென்றவர்கள், அங்கே விஷத்தன்மையுடன் கூடிய நீர், மனிதனை விழுங்கும் பாம்புகள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வெந்நீர் ஓடும் ஆறு உள்ளது என்றும், அது உடல் பாகங்களை வெந்து போகச் செய்வதாகவும் கூறினர்.
அதே பெரு நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரெஸ் ரூஸோ எனும் புவி விஞ்ஞானி சிறு வயதிலிருந்தே இதுபோன்ற கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்.
‘அமேசான் காடுகளின் உட்பகுதியில் ஒரு நதி இருக்கிறது, அதனடியில் ஏதோ பெரிய அடுப்பு உள்ளதைப் போல அதன் நீர் எப்போதும் கொதிநிலையிலேயே இருக் கிறது’ என்று ஆண்ட்ரெசின் தாத்தா சொல்லிக்கொண்டே இருப்பார். அவரின் தாயும்கூட, தனது சிறுவயதில் அந்த ஆற்றில் தன் தங்கையுடன் நீந்தியுள்ளதாகக் கூறுவார். இவையெல்லாம் ஆண்ட்ரெசின் ஆர்வத்தைத் தூண்டின.
இயற்கையாகவே புவியியலில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருந்த ஆண்ட்ரெஸ், அந்தத் துறையில் முறைப்படி கற்றுத் தேர்ந்தார். ஆராய்ச்சிப் பட்டம் பெற புவிவெப்ப சக்திகுறித்த ஆய்வில் இறங்கினார்.
அப்போதுதான், அவர் தன்னுடைய தாத்தா கூறிய அந்த வெந்நீர் நதி குறித்து ஆராயத் தொடங்கினார். அப்படி ஒரு நதி உண்மையில் இருக்குமா என்ற தயக்கத்துடனே அமேசான் காடுகளில் கடந்த 2011-ம் ஆண்டு தன் பயணத்தைத் தொடங்கினார்.
ஆனால் அவர் சந்தித்த வல்லுநர்கள் அனைவரும், அப்படி ஒரு வெந்நீர் நதி இருப்பதற்குச் சாத்தியமில்லை என்று கூறினர். ஆனால் ஆண்ட்ரெசின் அறிவியல் மூளை, ஒருவேளை அந்த நதியின் அருகில் எரிமலை ஏதேனும் இருந்தால் அப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது என்று கூறியது.
உண்மையில் அமேசான் காடுகள் பகுதியில் எரிமலை எதுவும் கிடையாது. சந்தேகத்துடனே தனது பயணத்தைத் தொடங்கிய ஆண்ட்ரெசுக்கு இன்ப அதிர்ச்சியாக நதி தென்பட்டது. உண்மையிலேயே அந்த நதி நீர் அதீத வெப்பத்தில் இருந்தது.
‘நான் அந்த நதியைப் பார்த்தவுடனேயே முதலில் அதனுடைய வெப்பநிலையைத்தான் சோதித்தேன். அப்போது அந்த நீர் 86 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்தது.
அது நீரின் கொதிநிலை இல்லையென்றாலும், அதற்கு மிக அருகில் இருப்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ஆக, இந்த வெந்நீர் ஆறு என்பது வெறும் கட்டுக்கதை அதை அல்ல, நிஜம் என்று புரிந்தது’ என கடந்த 2014-ம் ஆண்டு நடந்த ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டார் ஆண்ட்ரெஸ்.
உலகில் வெப்ப நீரூற்றுகள் ஏற்கனவே காணப்படுகின்றன என்றாலும், 25 மீட்டர் அகலம், 6 மீட்டம் ஆழம் மற்றும் 6.25 கி.மீ. நீளம் உள்ள ஒரு வெந்நீர் நதி ஆச்சரியம்தானே!
தவிர, இந்த நதிக்கு மிக அருகில் இருக்கும் எரிமலையே 700 கி.மீ. தொலைவில் உள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போதுதான், இது மற்ற நதிகளைப் போன்றது இல்லை என்பது புரியும்.
அமேசான் உள்ளூர்வாசிகள் இந்த நதிக்கு வைத்த பெயர், ஷனாய் டிம்பிஷ்கா. அதற்கு, ‘சூரியனின் வெப்பத்தால் கொதிக்கவைத்தது’ என்று பொருள்.
இந்நதி நீரின் சராசரி வெப்பம் 99 டிகிரி செல்சியஸ். நாம் பருகும் காபியின் வெப்பம் 55 டிகிரி செல்சியஸ்தான் என்றால், இது எவ்வளவு வெப்பமானது என்று புரியும்.
இந்த நதி நீரினுள் கை வைத்தால், வெப்பத்தின் காரணமாக இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற் படும். இவ்வளவு வெப்பம் சூரியனிடம் இருந்து கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்த ஆண்ட்ரெஸ், நதிப்பகுதியிலேயே தங்கி, அதுகுறித்து ஆராயத் தொடங்கினார்.
நேஷனல் ஜியோ கிராபிக் நிறுவனத்தின் உதவியுடன் நடந்த அந்த ஆய்வின் மூலம், பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
அதன்படி, அந்த நதிக்குச் சூரியனிடமிருந்து இந்த வெப்பம் ஏற்படவில்லை. மாறாக, தவறாக உருவான சூடான ஆதி நீரூற்றுகளின் தொகுப்பு அது என்பதை ஆண்ட்ரெஸ் கண்டுபிடித்தார்.
அதாவது, நம் பூமியை ஒரு மனித உடல் போல கற்பனை செய்துகொள்வோம். அதில் ஓடும் தவறான வெப்பக்கோடுகளும், பிளவுகளும் நம் உடலில் இருக்கும் தமனிகள் போன்றவை.
அவற்றில் இருக்கும் நீர் அதிக வெப்பம் கொண்டதாய் இருக்கும். அது வெளியே வந்து சேர்ந்து உருவாவதுதான் இந்த வெந்நீர் ஆறு.
அடிப்படையில் இந்த ஆறு உருவாகக் காரணம் மழைநீர்தான் என்று ஆண்ட்ரெசின் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
காட்டுப் பகுதியில் தேங்கிய மழையில் நீர், அடியில் உள்ள சூடான ஆதி நீரூற்றுகளுடன் வினைபுரியத் தொடங்க, வெந்நீர் ஆறு உருவாகியுள்ளது.
ஆண்ட்ரெஸ் தனது ஆராய்ச்சியின்போது இந்த நீரில் தவறிவிழும் தவளைகள், பூச்சிகள், பாம்புகள் உட்படப் பல உயிரினங்கள் வெந்து போய் உயிர் இழந்ததைப் பார்த்ததாகக் கூறுகிறார்.
ஆனால், குளிர் காலங்களில் இந்த நதியின் வெப்பம் ஓரளவு குறைந்துவிடுவதாகவும், அப்போது தன் தாய் கூறியதைப்போல அதில் நீந்தலாம் என்றும் கூறுகிறார்.
இயற்கை போட்டுவைத்த வெந்நீர்!
Related Tags :
Next Story