கோவையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் பங்கேற்பு


கோவையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Dec 2017 11:30 PM GMT (Updated: 2 Dec 2017 6:28 PM GMT)

கோவையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கோவை,

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 28–வது மாவட்டமாக கோவை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கோவை வ.உ.சி. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நூற்றாண்டு விழா நடைபெறும் பந்தலின் இடது புறத்தில் வரிசையாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 100 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அரிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை, போக்குவரத்து துறை, வனத்துறை உள்பட 13 அரசு துறைகள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அரசின் திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள், மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை இன்று காலை 9 மணியளவில் மூத்த அமைச்சர்கள் திறந்து வைக்கிறார்கள். மதியம் 1 மணி முதல் 3 மணி வரை எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் ரூ.691 கோடியே 69 லட்சம் மதிப்பிலான 37 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.1,328 கோடியே 95 லட்சம் மதிப்பில் 39 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 36,988 பயனாளிகளுக்கு ரூ.118 கோடியே 83 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசுகிறார்.

விழாவுக்கு துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசுகிறார். தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

முன்னதாக விழாவுக்கு வருபவர்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். முடிவில் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் நன்றி கூறுகிறார்.

விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் சேலத்திலிருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார். துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மதியம் கார் மூலம் பெரியகுளத்திலிருந்து கோவை வருகிறார். மற்ற அமைச்சர்களில் சிலர் நேற்றே கோவை வந்தனர். சில அமைச்சர்கள் இன்று வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடைபெறும் வ.உ.சி. மைதானத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா பந்தல் முகப்பு பகுதி அரண்மனை போன்று பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்..ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருவதற்காக கோவை–அவினாசி சாலையில் பெரிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலங்கார வளைவு பச்சை நிற ஓலையால் அமைக்கப்பட்டு மேலே இரட்டை இலை சின்னம் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மலர் மாலைகள் தோரணங்களாக தொங்கவிடப்பட்டுள்ளன.

விழாவுக்கு வருபவர்கள் உட்காருவதற்காக 40 ஆயிரம் இருக்கைகள் விழா பந்தலில் போடப்பட்டுள்ளன. பந்தலின் உட்புறம் வண்ண வண்ண துணிகள் மற்றும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு வருபவர்கள் பகுதி பகுதியாக பிரித்து உட்கார வைக்கப்படுகிறார்கள். அவர்கள் விழா பந்தலுக்குள் வந்து வெளியே செல்வதற்கு வசதியாக சவுக்கு கம்புகள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பந்தலின் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவர் கூட மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் ஆங்காங்கே பெரிய டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகள் உடனுக்குடன் ஒளிபரப்பப்படும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விழா மேடை பச்சை மற்றும் வெள்ளை நிற துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மேடையில் உட்காருபவர்களின் பின்புறம் பெரிய அளவில் டிஜிட்டல் போர்டு அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற இருப்பதையொட்டி கோவை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவை–அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலை ஆகிய சாலையோரம் ஏராளமான கட்–அவுட்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ கட்–அவுட்களும் மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளன. கோவை–அவினாசி சாலையின் நடுவில் உள்ள தடுப்பானில் அ.தி.மு.க. கொடிகள் விழா நடைபெறும் வ.உ.சி. மைதானத்தில் இருந்து விமான நிலையம் வரை கட்டப்பட்டுள்ளன.

இந்த விழாவுக்கு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக ரேஸ்கோர்ஸ், நேரு ஸ்டேடியம் மற்றும் பல்வேறு பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை, நேரு ஸ்டேடியம் உள்பட விழா நடக்கும் பகுதியை சுற்றிலும் 200 தற்காலிக கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன.

விழாவுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் பந்தலுக்குள் செல்வதற்காக தனித் தனி நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விழாவில் வருபவர்களின் வசதிக்காக விழா பந்தலை சுற்றிலும் குடிதண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்காக தமிழக கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்து 4 ஆயிரம் போலீசார் கோவை வந்துள்ளனர். அவர்கள் நேற்று மாலை முதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விழா மேடை அருகே போலீஸ் கட்டுப்பாட்டு அறை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

விழா காலை முதல் மாலை வரை நடப்பதால் கோவையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை போக்குவரத்து போலீஸ் உதவி கமி‌ஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை வருவதையொட்டி கோவை ரெயில் நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை கோவை–அவினாசி சாலையை பயன்படுத்தாமல் திருச்சி சாலை வழியாக ரெயில்நிலையம் செல்ல வேண்டும்.

திருச்சி சாலை வழியாக ரெயில் நிலையம் செல்லும் வாகனங்கள் எப்போதும் போல வரலாம். சத்தி சாலையிலிருந்து ரெயில்நிலையம் செல்லும் வாகனங்கள் 100 அடி ரோடு வழியாக வந்து வடகோவை மேம்பாலம், புரூக் பாண்ட் சாலை, குட்ஷெட் சாலை வழியாக ரெயில்நிலையம் செல்ல வேண்டும். அதே போல அவினாசி சாலை வழியாக விமான நிலையம் செல்லும் வாகனங்கள் சரவணம்பட்டி, காளப்பட்டி வழியாக விமான நிலையம் செல்ல வேண்டும். மேற்கு பகுதியில் இருந்து ரெயில்நிலையம் வரும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இதே போல சித்ரா சந்திப்பிற்கு கிழக்கு பகுதியிலிருந்து விமான நிலையம் வரை வரும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story