ஆம்பூர் அருகே ஏரி நிரம்பி தோப்புக்குள் தண்ணீர் புகுந்தது சாலையை துண்டித்து நீர் வெளியேற்றம்


ஆம்பூர் அருகே ஏரி நிரம்பி தோப்புக்குள் தண்ணீர் புகுந்தது சாலையை துண்டித்து நீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 2 Dec 2017 9:45 PM GMT (Updated: 2 Dec 2017 6:37 PM GMT)

ஆம்பூர் அருகே ஏரி நிரம்பி தோப்புக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சாலையை துண்டித்து நீர் வெளியேற்றப்பட்டது.

ஆம்பூர்,

ஆம்பூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக பல ஏரிகள் நிரம்பி வழிந்தது. தற்போது ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஏரி மற்றும் கானாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக அரங்கல்துருகம், ஊட்டல் காப்புக்காட்டில் பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள கானாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் ஏற்கனவே நிரம்பி இருந்த வெங்கடசமுத்திரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் பாலாற்று பகுதிக்கு செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக ஆங்காங்கே நீர் தேங்கி உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள தோப்புக்குள் தண்ணீர் புகுந்து, குளம்போல் தேங்கி உள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆம்பூர் – வெங்கடசமுத்திரம் சாலையை துண்டித்து பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு அப்பகுதியில் உள்ள கால்வாய் வழியாக மழைநீர் திருப்பப்பட்டது.

இப்பணிகளை மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெய்குமார், தாசில்தார் மீராபென்காந்தி, வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஈ.வெங்கடேசன், ஊராட்சி செயலாளர்கள் ராஜகம்பீரம், பாபு, கிராம நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

மேலும் தொடர் மழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story