பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி 10–ந்தேதி உண்ணாவிரத போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தஞ்சையில் வருகிற 10–ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று ஜாக்டோ– ஜியோ– கிராப் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட ஜாக்டோ– ஜியோ– கிராப் கூட்டமைப்பின் உறுப்பினர் சந்திப்பு இயக்கம் மற்றும் செயல் விளக்க கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் நம்பிராஜ், பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 6–வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்ட பின்னரே திருத்திய ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு நிலுவைத்தொகையினை 1–1–2016 முதல் பணப்பயனாக வழங்க வேண்டும்.
7–வது ஊதியக்குழு பரிந்துரைகளில் மத்திய அரசு அலுவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் அறிவித்தது போல் தமிழக அரசும் ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். தமிழக அரசில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தொகுப்பூதிய காலத்தினை பணிவரன்முறை செய்து வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10–ந்தேதி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு மாவட்ட அளவில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது. ஜனவரி 6–ந்தேதி மாநில அளவில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது. இதில் திரளாக பங்கேற்பது. இதன் பின்னரும் கோரிக்கைகள் நிவர்த்தி செய்ய முன்வரவில்லை என்றால் சென்னையில் தொடர்ந்து போராட்ட நடவடிக்கைகளை முன்வைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள் பாண்டியன், கண்ணப்பன், கார்த்திகேயன், கோபாலகிருஷ்ணன், முருகன், ரெங்கராஜ், குழந்தைசாமி, கிருஷ்ணமூர்த்தி, எழிலரசன், ரவிக்குமார், பாலையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் அருள்ராஜன் நன்றி கூறினார்.