சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
குஜிலியம்பாறையில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. தேங்கிய தண்ணீரில் நீச்சல் அடித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜிலியம்பாறை,
திண்டுக்கல்–கரூர் நெடுஞ்சாலையின் மைய பகுதியில் குஜிலியம்பாறை அமைந்துள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக குஜிலியம்பாறை பஸ் நிலையம், கடைவீதி, காமராஜர் சிலை, வேகத்தடை, திண்டுக்கல்–கரூர் சாலை, புளியம்பட்டி, பாளையம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால் சாலைகள் பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் சாலைகளில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்தவும் கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சாலைகளை சீரமைக்கக்கோரி குஜிலியம்பாறை பஸ் நிலையம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சண்முகவேல், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின் போது சாலையில் நாற்றுகளை நட்டு வைத்து கோஷங்களை எழுப்பினர். மேலும், வாலிபர் ஒருவர் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீச்சல் அடித்து போராட்டம் செய்தார். பின்னர் நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில், விவசாய சங்க ஒன்றிய தலைவர் தங்கவேல், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.