‘‘அ.தி.மு.க. மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்’’ முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க. மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் என்று ஓமலூரில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெய்காரப்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனோன்மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் நெய்காரப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரஞ்சிதா பெருமாள், அவரது கணவர் பெருமாள் ஆகியோர் தலைமையில் தே.மு.தி.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியில் இருந்து 1,500 பேர் விலகி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இதையடுத்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெற்றிவேல், ராஜா, சின்னதம்பி, மருதமுத்து, வெங்கடாசலம், சித்ரா, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றிய இந்த இயக்கத்தில் நீங்கள் அனைவரும் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதன்மூலம் அ.தி.மு.க.விற்கு மேலும் வலுமையும், பலத்தையும் சேர்ப்பதாக உள்ளது. வீரபாண்டி தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. இனிமேல் அது எக்கு கோட்டையாக மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும். கட்சியில் இணைந்தவர்கள், தங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் அதை எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் அது நிச்சயம் நிறைவேற்றப்படும். மக்களின் எண்ணங்களை கண்டறிந்து அவற்றை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. அ.தி.மு.க. மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். ஏழை, எளியோர், ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு முதல்–அமைச்சர் பேசினார்.