தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கை; நாராயணசாமி அறிவிப்பு
தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரி துறைமுகத்திற்கு சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்கள் மூலம் சரக்குகளை ஏற்றி, இறக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
சென்னையில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டுவரப்படும் கன்டெய்னர்கள் புதுச்சேரியில் இறக்கி கேரளா, தமிழ்நாட்டின் தென் பகுதி மற்றும் கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்படும். இதற்காக தனியார் நிறுவனங்கள் 2 கப்பல்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. விரைவில் சரக்கு போக்குவரத்து தொடங்கப்படும். இதன் தொடக்க விழாவிற்கு மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரை அழைக்க திட்டமிட்டுள்ளோம்.
புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கு தொடங்கப்பட்ட விமான சேவை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதற்கிடையில் ஒடிசா ஏர் நிறுவனம் சார்பில் சென்னையில் இருந்து புதுச்சேரி, சேலம், கோவை மற்றும் சென்னையில் இருந்து புதுச்சேரி, சேலம் பெங்களூரு ஆகிய இரண்டு வழித்தடங்களில் விமான சேவைகளை தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்றுள்ளனர்.
இந்த மாத கடைசியில் அல்லது அடுத்த மாதம் (ஜனவரி) தொடக்கத்தில் இந்த விமான சேவை தொடங்கப்படும். ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ, ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களிடம் புதுச்சேரியில் இருந்து நேரடியாக திருப்பதி, கோவை, கொச்சின், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு விமான சேவை தொடங்க கேட்டுள்ளோம். இப்பகுதிகளுக்கு விமான சேவை தொடங்கப்படுவதன் மூலம் வியாபாரமும், சுற்றுலாவும் மேம்படும். புதுச்சேரியில் இருந்து நாட்டின் பல்வேறு மாநில தலைநகரங்களுக்கு ரெயில் சேவையை தொடங்கியதைப்போல், தற்போது விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதுச்சேரியில் மரணம் அடையும் வக்கீல்களுக்கு சேமநல நிதியுதவி இல்லை, எனவே நிதிஉதவி தர வேண்டும் என வக்கீல்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதனை கருத்தில் கொண்டு முதல்–அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கி நிதியுதவி கொடுக்க உள்ளோம். தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வழங்கப்படுவதைப்போல் புதுவையில் இளம் வக்கீல்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக முதல்–அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.9 லட்சம் ஒதுக்கித் தரப்படும். அடுத்த ஆண்டு முதல் அரசு திட்டமாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறையிலும் 3 சதவீத வேலைவாய்ப்பு கொடுக்க ஆணை பிறப்பித்தோம். அதன் அடிப்படையில் 234 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க மாற்றுத்திறனாளிகள் ரூ.8½ கோடி கடன் பெற்றுள்ளனர்.
இதை திரும்பச் செலுத்த சிரமப்படுவதால், கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வது அல்லது வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம். பொதுத்துறை நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத வேலைவாய்ப்பு கொடுக்க அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் மணல் இல்லாததால் தமிழகத்தில் மணல் கேட்டோம். ஆனால் தரவில்லை. தற்போது வெளிநாடுகளில் இருந்து மணலை கொள்முதல் செய்து தர பல நிறுவனங்கள் பேசி வருகின்றன. இதுகுறித்து பரிசீலித்து வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.