வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பிரபாகரன், கிருஷ்ணராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேல், ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள் மற்றும் அனைத்து துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மிக அதிக அளவில் பாதிப்புக்கு உடபடும் 18 இடங்களும், அதிக அளவில் பாதிப்புக்கு உட்படும் 74 இடங்களும், மிதமாக பாதிப்புக்கு உட்படும் 64 இடங்களும், குறைந்த அளவில் பாதிப்புக்கு உட்படும் 44 இடங்கள் என மொத்தம் 200 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளை உரிய முறையில் கண்காணித்து பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள் மற்றும் பகுதிகளுக்கு தேவைப்படும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்குவதற்கு துணை கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கிய 60 மண்டல குழுக்கள் மற்றும் தேவைக்கேற்ப பயன்படுத்தும் வகையில் 38 மாற்று மண்டல குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.
பேரிடர் சமயங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 5 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும், 4 புயல் பாதுகாப்பு மையங்களும், 178 தற்காலிக முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பெருமழையால்£ல் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீட்புப்பணிக்காக நன்கு நீச்சல் தெரிந்த 145 நபர்களும், 9 படகுகளும் இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ள பல்வேறு பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் நீர்வள ஆதார அமைப்பு, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, போன்ற துறைகளில் மணல் மூட்டைகள் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 71 மணல் மூட்டைகள், 2 ஆயிரத்து 736 சவுக்கு கம்புகள், 12 பொக்லைன் எந்திரங்கள், 94 மரம் அறுக்கும் எந்திரங்கள், 28 நீர் வெளியேற்றும் மோட்டார்கள், 187 ஜெனரேட்டர்கள், 19 குடிநீர் லாரிகள், 52 சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள், 136.75 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர், 1.151 மெட்ரிக் டன் குளோரின் மாத்திரைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.