ஒப்பந்த காலம் முடிந்ததால் 47 பார்களுக்கு ‘சீல்’ வைப்பு


ஒப்பந்த காலம் முடிந்ததால் 47 பார்களுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 3 Dec 2017 5:19 AM IST (Updated: 3 Dec 2017 5:19 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் ஒப்பந்த காலம் முடிந்ததால் 47 பார்களுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் 90–க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் மொத்தம் 88 இயங்கி வந்தது. பார்களை தனிநபர்கள் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்த காலம் ஓராண்டு கடந்த மாதம் (நவம்பர்) 29–ந் தேதியுடன் முடிவடைந்தது.

ஒப்பந்த காலம் முடிவடைந்த பின் மீண்டும் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாத பார்களை மூட டாஸ்மாக் அதிகாரிகள், பார் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் சில பார்கள் தொடர்ந்து இயங்கி வந்தது. இதையடுத்து ஒப்பந்த காலம் முடிந்த பின்னும் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் இயங்கி வந்த பார்களை டாஸ்மாக் அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்தனர். அதன்படி கரூர் மாவட்டத்தில் பார்களை கணக்கெடுக்க தொடங்கினர்.

இதில் கரூர் மார்க்கெட் பகுதியில் இயங்கி வந்த பார் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 47 இடங்களில் ஒப்பந்த காலம் முடிந்த பின்னும் இயங்கி வந்த பார்களை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மற்ற 41 பார்களுக்கு ஒப்பந்த காலம் இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்ததாக பார்களை நடத்த விரைவில் ஒப்பந்தம் விட இருப்பதாகவும் கூறினர்.


Next Story