உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி


உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி
x
தினத்தந்தி 3 Dec 2017 5:27 AM IST (Updated: 3 Dec 2017 5:27 AM IST)
t-max-icont-min-icon

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு புதுக்கோட்டை சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்பவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இந்த மனிதசங்கிலியை மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கடந்த ஆண்டு மாவட்ட அளவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட, தொற்று உள்ள 10–ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், ஏ.ஆர்.டி. தொடர் சிகிச்சையை முறையாக எடுத்தவருக்கு பாராட்டு சான்றிதழையும் மற்றும் எய்ட்ஸ் பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்படும் நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து பொது மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1–ந் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நாம் அனைவரும் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதுடன் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தழிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். எச்.ஐ.வி, எய்ட்ஸ் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், எச்.ஐ.வி. உடன் உள்ளோரின் வாழ்க்கை தரம் உயரவும், அவர்களது வாழ்நாளை நீட்டிக்கவும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

முன்னதாக எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தொடர்ந்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்பவர்களுடன் இணைந்து சமபந்தி போஜனமும் நடைபெற்றது. இதில் உதவி கலெக்டர் கே.எம்.சரயு, சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சுரேஷ்குமார், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்லத்துரை, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் ஜெயக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story