செய்தி தரும் சேதி ஒரு தேர்தல், ஒரு வாக்கு, ஒரு சாவடி


செய்தி தரும் சேதி ஒரு தேர்தல், ஒரு வாக்கு, ஒரு சாவடி
x
தினத்தந்தி 3 Dec 2017 12:27 PM IST (Updated: 3 Dec 2017 12:27 PM IST)
t-max-icont-min-icon

மனித நாகரிகம் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது. தொடக்கத்தில் பெண்வழிச் சமுதாயம் இருந்தது.

னித நாகரிகம் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது. தொடக்கத்தில் பெண்வழிச் சமுதாயம் இருந்தது. அப்போது வேட்டையாடும் வேட்கை மட்டும் ஆண் களுக்கு, சேகரிக்கும் செய்கை மட்டும் பெண்களுக்கு.

தாய்வழிச் சமூகத்தில் உணவுப் பூர்த்தியும், இன விருத்தியும் இன்றியமையாத தேவைகள். அதைச் சுற்றியே அக்கூட்டங்கள் இயங்கியதாக ‘பண்டைச் சமுதாயம்’ என்ற நூலை எழுதிய லூயி மார்கன் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து பெண் தலைமையில் குழுக்கள் இருந்ததை ‘குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூலில் ஏங்கல்ஸ் தெரிவிக்கிறார். அவற்றைத் தழுவி கதைபோல எழுதப்பட்டதே ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்கிற ராகுல் சாங்கிருத்தியனின் அமரப்படைப்பு.

வனங்களில் திரிந்தவர்கள் வளர்ந்து வளங்களைத் திரட்டி வேளாண்மை செய்யும்போது ஆண்வழிச் சமுதாயம் உண்டானது. அப்போது சொத்துகள் உருவாயின. கூட்டங்கள் இனக்குடிகள் ஆயின. அப்போதும் இனக்குடியிலிருப்பவர்கள் விவரங்கள் அனைவருக்கும் அத்துபடி. மனைவியும் சொத்தாக மருவினாள்.

சொத்துகளைப் பாதுகாக்க தலைமை தேவைப்பட்டது. தங்களுக்குள் பாதுகாப்பான ஒருவனை தலைவனாக்கினார்கள். இனக்குடி பெருகி ‘சூப்பர் இனக்குடி’ ஆனது. அப்போது நகரங்கள் உருவாயின. பரிச்சயமில்லாத முகங்களும் பங்கு வகித்தன. அவர்களைக் காப்பாற்ற அரசு உருவானது.

‘தலைவன்’ என்கிற அமைப்பிலிருந்து ‘அரசன்’ என்கிற கோட்பாடு உருவானது. அதிகாரங்கள் ஒரு மையத்தில் குவிந்தன. சட்டம் இயற்றுவதும், செயல்படுத்துவதும், நீதியை நிர்வகிப்பதும் மன்னனே என்று முடிவானது. அந்தச் சூழலிலும் மன்னனுக்கு மக்களைக் காப்பதே முக்கிய நோக்கமென்று குறிப்பிடப்பட்டது.

திருக்குறளில், ‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்’ என திருவள்ளுவர் மன்னனின் மாண்பை வலியுறுத்துகிறார்.

‘மன்னனே உயிர்’ என புறநானூறு குறிப்பிடுகிறது.

‘அரசில்லாத நிலம் நீரில்லாத நதி’ என ராமாயணம் தெரிவிக்கிறது.

‘மன்னன் செய்வது அனைத்தும் சரியென’ நாரரத சுருதி குறிப்பிடுகிறது.

‘மக்களை மிக நன்றாக மன்னன் பராமரிக்க வேண்டும்’ என பஞ்சதந்திரம் தெரிவிக்கிறது.

‘மக்களைப்பற்றியும், சகல ஜீவராசிகளைப் பற்றியும் மன்னன் அறிவது அவசியம்’ என மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. ‘மக்களின் நலத்தில்தான் மன்னனின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது’ என்கிறது அர்த்தசாஸ்திரம். ‘உயிரெலாம் உறையும் ஓர் உடம்பும் ஆயினான்’ என தசரதனை கம்பர் புகழ்கிறார்.

‘தமிழக மன்னர்கள் முன்னோர் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு நயா பைசாகூட எடுத்து செலவழிக்கவில்லை’ என மார்க்கோபோலோ எழுதியிருக்கிறார். தமிழக மன்னர்கள் எளிமையாக இருந்தார்கள். எளிதில் அணுகக்கூடியவர்களாக இருந்தார்கள்.

இந்திய மன்னர்கள் அனைவரும் அப்படி இருந்ததாகத் தெரிவிக்க முடியாது. இந்திய மகாராஜாக்களைப் பற்றி முகில் எழுதிய நூலில் அவர்கள் ஆடம்பரங்கள் விவரிக்கப்படுகின்றன. புலிவேட்டைக்கு மனிதர்களை இரையாகக் (human bait) கட்டி வைத்தவர்கள் உண்டு. பன்னீரில் குளித்த மகாராணிகள் உண்டு. வெளிநாடுகளிலும் வியர்வை சிந்தி உழைத்த மக்களைச் சுரண்டி வாசனைத் திரவியங்களில் வாழ்க்கையைக் கழித்தவர்கள் இருந்தார்கள் என்பதை கிப்பன் எழுதிய ‘ரோமாபுரியின் வீழ்ச்சியும் அழிவும்’ நூலில் காணலாம். அவர்கள் ஆடம்பரங்களை விவரித்த நூலே, பேரறிஞர் அண்ணா எழுதிய ‘ரோமாபுரி ராணிகள்’.

இங்கிலாந்தில் 220 குற்றங்கள் மரண தண்டனைக்கு உட்பட்டவையாக இருந்தன. ஆடு திருடினால்கூட கொடூரமான சாவு. தமிழகத்தில்கூட அரச மாமரத்தின் கனியை தெரியாமல் உண்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சங்க இலக்கியம் குறிப் பிடுகிறது.

இன்று அரச மரபைச் சாராதவர்களும் அதைவிட ஆடம்பரத்தில் உழல்வதைப் பார்க்கிறோம். சிலர் உண்ண பிரான்சு நாட்டு ரொட்டி வருவதாகவும், குடிப்பதற்கு அமேசான் நதியின் நீர் வருவதாகவும் கேள்விப்படுகிறோம். பணம் கடவுளாகும்போது ஆடம்பரங்கள் ஆராதனைகளாகின்றன.

மன்னர்கள் அத்துமீற வல்லவர்கள் என்பதை ரோமாபுரியில் லூக்ரஷியாவின் சிதைவால் தெரிந்து ‘செனட்’ முறையைக் கொண்டு வந்தார்கள். அரசர் பதவி மறுபடியும் வரக்கூடாது என ஜூலியஸ் சீசரைக் குத்திக்கொன்றது செனட். அதுவோ ஆகஸ்டு சீசர் வடிவில் வந்தது. கிரேக்கத்தில் ஆள்பவர்கள் எல்லை மீறினால் ‘தேசப்பிரஷ்டம்’ செய்யப்படும் வழக்கம் இருந்தது. இங்கிலாந்தில் பாராளுமன்ற முறை கை ஓங்க வேண்டும் என ஆலிவர் கிராம் வெல் செய்த முயற்சி சில காலத்தில் முறிந்து போனது.

மக்களே மக்களை ஆளுகிற முறை அனைத்து வகைகளிலும் இது வரை உள்ள நிர்வாக நெறிகளில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதற்கு தேர்தல் ஒன்றே வழி. அந்தத் தேர்தலில் வாக்களிப்பு மூலம்தான் மக்களின் மனக்கிடக்கையை அறிய முடியும்.

இன்று இருப்பதைப்போல அனைவருக்கும் வாக்குரிமை ஒரு காலத்தில் இல்லை. 1920 வரை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமையோ, தேர்தலில் நிற்கும் தகுதியோ இல்லை. சில ஜனநாயக நாடுகளில் சொத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் வாக்கு சொந்தம். சில நாடுகளில் குறிப்பிட்ட மார்க்கத்தினருக்கு மட்டும்தான் ஓட்டுப் போட உரிமை உண்டு.

சவுதி அரேபியாவில் 2015-ம் ஆண்டு முனிசிபல் தேர்தலில்தான் பெண்களுக்கு ஓட்டுப் போட உரிமை அளிக்கப்பட்டது. பெண்களுக்கும் ஓட்டுப் போட சாசனம் கொண்டுவந்த முதல் நாடு நியூசிலாந்து. குவைத்தில் 2005-ம் ஆண்டுதான் ஓட்டுப் போடத் தொடங்கினார்கள். தென்னாப் பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு மட்டுமே ஓட்டுப்போடும் உரிமை 1994 வரை இருந்தது.

‘செல்மா’ என்கிற ஆங்கிலத் திரைப் படம். அந்தப் பெயரைக் கொண்ட பகுதியில் வாழ்ந்த அமெரிக்கஆப்பிரிக்கர்களுக்கு ஓட்டுப்போட உரிமையில்லை. அவர்கள் அதற்காகப் பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் காரணம் காட்டி வாக்குரிமை நிராகரிக்கப்படும். ஊர்வலம் சென்றால் காவலர்கள் ஏவிவிடப்பட்டு கை கால் முறியுமளவு அடி விழும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் தலைமையில் மக்கள் செல்மா முதல் மாண்ட்கோமரி வரை மவுனமாக அடியைப் பொருட்படுத்தாமல் ஊர்வலம் சென்று ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் மூலம் வாக்குரிமையைப் பெறுகிறார்கள். பார்க்கிறவர்கள் கண்களை கசிவுநீர்க் குட்டையாக்கும் படம்.

இங்கிலாந்தில்கூட 1928 வரை ஆண்கள் மட்டுமே ஆள்காட்டி விரலை அழுக்காக்கிக் கொண்டார்கள். இந்தியாவில் நடந்த முதல் தேர்தல் முதற்கொண்டு அனை வருக்கும் வாக்குரிமை, குறிப்பிட்ட வயதை அடைந்தால் போதும்.

இந்தியா விசித்திரங்களைக் கொண்டது. மக்கட்தொகை அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளும், சொற்பமுள்ள பகுதிகளும் இங்கு வேற்றுமையில் ஒற்றுமை. இந்தியாவின் பெருமை குஜராத்தில் உள்ள கிர் காடுகள். அவற்றில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. அழிந்து வந்த ஆசிய சிங்கங்களைக் காப்பாற்றிய பெருமை ஜுனாகத் நவாபையே சாரும். ஒற்றைப்படையிலிருந்த ஆசிய சிங்கங்களை மற்றவர்கள் வேட்டையாட விடாமல் காப்பாற்றி இனவிருத்தி செய்ய உதவினார். ஆனால் பாவம் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து விட்டார்.

காடுகளில் மாமிசப்பட்சிணிகளின் எண்ணிக்கையும் அவசியம். அவை மான்கள், காட்டெருமைகள் ஆகியவற்றின் தொகை அதிகமாகாமல் காப்பாற்றி காடுகளைப் பாதுகாக்கின்றன. ஆசிய சிங்கங்கள் அற்புதமானவை. அவை அழிந்தால் இயற்கையின் ஒரு பகுதி சிதைந்ததைப்போல பொருள்.

கிர் காடுகளுக்கு நான் சென்றபோது அந்தக் கடும் குளிரில் நான்கைந்து சிங்கங்களைக் காண முடிந்தது. அது அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அங்கு வந்தபோது ஒரு சிங்கம்கூட கண்ணில் படவில்லையாம். கடைசியில் அடைத்து வைத்த சிங்கங்களைப் பார்த்துவிட்டுச் சென்றாராம்.

அங்கு சிங்கத்தின் வெகு அருகில் இருந்த வன அலுவலர் களைக் கண்டேன். அவர்கள் கையில் சின்ன கழி மட்டுமே இருந்தது. அங்கே பாதுகாவலில் ஈடுபட்டிருப்பதில் அவர் களுக்கு அத்தனை பெருமை. நம் அரிய உயிரினங்களைப் பாதுகாப்பதில் உயிரையும் பணயம் வைத்து காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் வனத்துறையினர் வணக்கத்திற் குரியவர்கள்.

கிர் சரணாலயத்தின் மத்தியில் பானேஜ் என்கிற கிராமம் இருக்கிறது. அங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மானேஷ்வர் மகாதேவ் கோவில் அமைந்திருக்கிறது. அந்த ஆலயத்தில் பாரத்தாஸ் குரு தர்ஷன்தாஸ் என்பவர் பல்லாண்டுகளாகப் பூசாரி. அந்தப் பகுதியில் மக்கள் வசிக்க அனுமதியில்லை. பூசாரி மட்டும் கோவிலிலேயே தங்கியிருக்கிறார்.

மக்களாட்சியில் அத்தனை வாக்குகளும் முக்கியம் என்பதே அடிப்படைக் கொள்கை. நடக்க முடியாதவர்களை வாக்குச்சாவடிக்கு தூக்கி வந்து ஓட்டுப் போட வைப்பதை தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்.

ஒரே வாக்கால் தேர்தல் முடிவு மாறலாம், ஒரே நாக்கால் ஒருவர் எதிர்காலம் வீழலாம். ஒருவரே உள்ள அந்த இடத்திலும் ஓர் ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. அங்கு தேர்தல் அதிகாரி, அலுவலக உதவியாளர், இரண்டு காவலர், ஒரு மத்திய ரிசர்வ் படை வீரர் ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என அந்த மாநிலத் தேர்தல் கமிஷனின் ஓட்டுச்சாவடி அதிகாரி சிமன்பாய் ருபாலா குறிப்பிட்டிருக் கிறார்.

இனத்தின் பெயராலும், மொழியின் பெயராலும், நிறத்தின் தன்மையாலும், அந்தஸ்தின் பெயராலும், பாலின் பிரிவாலும், வாக்குரிமை மறுக்கப்படுகிற உலக வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது ஒருவருக்காக மட்டுமே அமைக்கப்படும் வாக்குச்சாவடி இந்திய ஜனநாயகத்தின் மாண்பை சேதியாகச் சொல்லும் செய்தியாக இருக்கிறது.

(செய்தி தொடரும்)

Next Story