கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் டெல்டா பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், டெல்டா பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலூர்,
வங்கக்கடலில் உருவான ஒகி புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்து நின்றதால் பொதுமக்கள் வெளியே வந்து செல்ல சிரமப்பட்டனர்.
மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை ஓய்ந்த நிலையில் இருந்தது. ஆனால் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் என மாவட்டத்தின் பிற பகுதிகளில் மிதமான அளவில் தொடர்ந்து மழை பெய்தது.
மாவட்டத்தில் டெல்டா பகுதியாக இருந்து வரும் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், லால்பேட்டை மற்றும் ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், பெண்ணாடம் பகுதியிலும் நேற்று முன்தினம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
இதில் குறிப்பாக கண்டமங்கலம், குறுங்குடி, வீராநந்தபுரம், வீராணநல்லூர், நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், திருமூலஸ்தானம், எடையார், பிள்ளையார்தாங்கல், திருநாறையூர், எள்ளேரி கிழக்கு, சர்வராஜன்பேட்டை, வீரநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று காட்டுமன்னார் கோவிலில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு 34 கூரை வீடுகளும், நேற்று 10 கூரைவீடுகள் பகுதிஅளவில் இடிந்து விழுந்து சேதமடைந்தன. மேலும் ஒரு பசுமாடு, 3 கன்றுகுட்டிகளும் மழைக்கு உயிரிழந்து இருக்கின்றன.
மாகொத்தங்குடி கிராமத்தில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள நூலக கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மணவாய்க்கால் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீரநத்தம்நெடுங்கூர்–விளங்கல் சாலையை மூழ் கடித்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் நேற்று மழை இல்லாததால் விளைநிலங்கள், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் மெல்ல, மெல்ல வடிய தொடங்கி இருக்கிறது. விருத்தாசலம் பகுதியில் 2,500 ஏக்கர் சாகுபடி செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் மழைவெள்ளத்தில் மூழ்கிஉள்ளது.
வெள்ளாற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரால், பெண்ணாடம் அருகே சவுந்திரசோழபுரம்–கோட்டைக்காடு இடையே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது., இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் மழை ஓய்ந்தே காணப்பட்டது. குறிப்பாக மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் காலை 10 மணிக்கு பிறகு மழை இல்லை. இதனால் தாழ்வான பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீர் வடிய தொடங்கியது. வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் மழை பெய்யவில்லை. பின்னர் காலை 10 மணிக்கு பிறகு சுள்ளென வெயில் அடித்தது.
கடந்த சில நாட்களுக்கு பிறகு வெயில் அடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக வீடுகளில் பெண்கள் துணிகளை சலவை செய்து வெயிலில் உலர வைத்தனர். பகல் 1 மணிக்கு பிறகு மீண்டும் வானத்தில் கருமேகங்கள் திரண்டதால் சூரியன் மறைந்தது. ஆனால் மாலை வரையிலும் மழை பெய்யவில்லை.
மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் மழை பெய்யவில்லை என்றாலும் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் என மாவட்டத்தின் பிற பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 32 மில்லி மீட்டர், குறைந்தபட்சமாக கடலூரில் 1.90 மில்லி மீட்டர் மழை பதிவானது. சராசரியாக 19.69 மில்லி மீட்டர் மழைபதிவானது.
மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்துள்ள மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–
கொத்தவாச்சேரி – 30
சிதம்பரம் – 27.70
கீழ்செருவாய் – 26
சேத்தியாத்தோப்பு – 25.40
பெலாந்துரை – 25
காட்டுமன்னார்கோவில் – 24
லால்பேட்டை – 24
அண்ணாமலைநகர் – 21.30
புவனகிரி – 21
பரங்கிப்பேட்டை – 21
விருத்தாசலம் – 18.40
தொழுதூர் – 18
லக்கூர் – 16.10
பண்ருட்டி – 15.40
வானமாதேவி – 14.30
குப்பநத்தம் – 14
மே.மாத்தூர் – 14
வேப்பூர் – 14
காட்டுமயிலூர் – 10