மழை வெள்ளத்தில் அரசியல் செய்யக்கூடாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


மழை வெள்ளத்தில் அரசியல் செய்யக்கூடாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 4 Dec 2017 4:00 AM IST (Updated: 4 Dec 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யும் கட்சி பா.ஜனதா என்று கட்சி மாநில செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடி,

தமிழக பா.ஜனதா செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் கன்னியாகுமரி செல்வதற்காக நேற்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கன்னியாகுமரியில் புயல், வெள்ளம் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு உள்ளது. தென்மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக அதற்கான மீட்பு நடவடிக்கையில் மத்திய அரசு உதவி செய்து உள்ளது. துணை ராணுவம், கப்பல்கள், ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு உள்ளது. புயலில் சிக்கி யாரெல்லாம் காணாமல் போய் உள்ளார்கள் என்ற விவரத்தை அரசு தெளிவாக கூற வேண்டும். மழை வெள்ளத்தில் அரசியல் செய்யக்கூடாது. தமிழக அரசு இன்னும் முன்னெச்சரிக்கையோடு இருந்து இருக்க வேண்டும். மக்களின் துன்பத்தில் உடனடியாக பங்கு கொள்வதற்காக பிரதமர் மோடி, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு என்னென்ன உதவி தேவையோ, அதனை செய்வோம் என்று கூறி உள்ளார்.

தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவிலேயே ஆக்கப்பூர்வமான அரசியல் செய்து வரும் கட்சி பா.ஜனதா. ஆர்.கே.நகர் தேர்தலில் வைகோ, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து உள்ளார். திராவிட கட்சிகளை அழித்து இந்துத்துவா சக்திகள் மேலோங்கி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஆர்.கே.நகரில் கூட்டணி வைக்கிறார்களாம். அவர்கள் கூட்டணி வைப்பது என்றால் வைத்துக் கொள்ளட்டும். அதற்கு காரணம் தேட முடியவில்லை என்றால் எங்கள் சுயநலத்துக்காக கூட்டணி வைத்து உள்ளோம் என்று கூட சொல்லட்டும். ஆனால் அவர்கள் விருப்பப்படி கூட்டணி வைத்துக் கொண்டு, அவர்கள் இருவரும் துரோகிகள் என்று குற்றம் சாட்டியதை எல்லாம் மறந்து, அவர்கள் கூட்டணி வைத்து உள்ளனர். இன்று, அந்த அவர்கள் கூட்டணி வைப்பதற்கு காரணம் பா.ஜனதா என்று சொல்கிறார்கள். இதுதான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

பா.ஜனதா கட்சியின் தற்போதைய பணி வேலையே செய்யாத ராகுலை வேலை செய்ய வைப்பதும், சுறுசுறுப்பே இல்லாத ராகுல் போன்றவர்களை சுறுசுறுப்படைய செய்வதும், கூட்டணி பற்றி சிந்திக்காத வைகோவை கூட்டணி வைக்க வைப்பதும்தானா?. பா.ஜனதா கட்சி நேர்மறையான அரசியலை செய்து கொண்டு இருக்கிறது. பா.ஜனதா கட்சியை பார்த்து பயப்படவில்லை என்றால், ஏன் பா.ஜனதாவை எதிர்த்து கூட்டணி வைக்கிறேன் என்று கூற வேண்டும். எல்லோரின் மையப்புள்ளியாகவும் பா.ஜனதா கட்சி இருப்பதற்கு காரணம் என்ன?.

நீங்கள் எவ்வளவு தடுத்தாலும், தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்பதை உணர்ந்து இருக்கிறீர்கள். எவ்வளவுதான் விமர்சனம் வைத்தாலும் 14 மாநகராட்சிகளை உத்தரபிரதேசத்தில் பிடித்து உள்ளது. தமிழகத்திலும் பா.ஜனதா கட்சி தனது அங்கீகாரத்தை பெறும். அதற்காகத்தான் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறோம். நாங்கள் மக்களை நேர்முக அரசியலுக்காக, வளர்ச்சித்திட்டங்களுக்காக அணுகுகிறோம்.

பிரதமர் மோடி அனைத்து உதவியும் செய்கிறேன் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறினார். அதன் பிறகு தி.மு.க. செயல்தலைவர் முக.ஸ்டாலின் 2 நாள் கழித்து கடிதம் எழுதுகிறார். தமிழக மக்களிடம் தூரத்தில் இருந்தாலும் தொடர்பு வைத்து இருப்பவர் மோடி. பக்கத்தில் இருந்தாலும் 2 நாள் கழித்துதான் கடிதம் எழுதவே தோன்றுகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். ஏனென்றால் இன்று இந்த கட்சிகளை நம்பி மக்கள் ஏமாந்தது போதும். தேசிய கட்சியான பா.ஜனதாவை நம்பி அவர்கள் ஆதரவை தர காத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story