ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்கள் நடிகர்களை புறக்கணிப்பார்கள் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பேட்டி
ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்கள் நடிகர்களை புறக்கணிப்பார்கள் என்று மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது கூறினார்.
திருச்சி,
நாளை மறு நாள் (டிசம்பர்–6) பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25–வது ஆண்டு தினமாகும். இதனை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கிறது. எனவே, அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமை கட்சியினரும் பங்கேற்பார்கள்.
ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார். அவருக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவித்து இருப்பது வரவேற்க தக்கது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வியை தழுவுவார். ஏனென்றால் மக்கள் இந்த அரசு மீது கடும் வெறுப்பில் உள்ளனர்.
எனவே இரட்டை இலை சின்னம் கிடைத்து விட்டதே என்ற நம்பிக்கையில் இருந்தாலும் அ.தி.மு.க.வினரால் வெற்றி பெற முடியாது. தமிழகத்திலேயே முதல் முறையாக ஒரு இடைத்தேர்தலில் முக்கிய நடிகர்கள் வேட்பாளராக களம் இறக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் ஆதரவு கிடைக்காது. வாக்காளர்கள் அவர்களை புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் 6–ந் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாகீர், மாவட்ட செயலாளர்கள் உதுமான் அலி, அப்துல் ரகீம், நிர்வாகிகள் அப்துல் நாசர், சாகுல் அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.