சேலத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
சேலத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
சேலம்,
சேலம் மன்னார்பாளையம் பிரிவு ரோடு அருகே உள்ள அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா, கட்டிட மேஸ்திரி. இவர்களுடைய மகன் சூர்யா (வயது 15). இவர் மரவனேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். அல்லிக்குட்டை அருகே வெங்கடாசலபதி காலனியை சேர்ந்த ராஜா மகன் ஹரிவிக்னேஷ் (15). இவர் மரவனேரியில் உள்ள இன்னொரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். சூர்யாவும், ஹரிவிக்னேசும் நண்பர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் நேற்று காலை வீட்டில் பெற்றோரிடம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்றனர். ஆனால் அவர்கள் கோவிலுக்கு செல்லாமல், தன்னுடன் படிக்கும் சக நண்பர்களான சஞ்சய், விமன், ஹரிராம், கேசவன் ஆகியோருடன் சேர்ந்து சுற்றி உள்ளனர்.
பின்னர் அவர்கள், உடையாப்பட்டி அருகே கந்தாஸ்ரமம் கோவிலுக்கு பின்புற பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கல்குவாரி குட்டைக்கு குளிக்கச்சென்றனர். தற்போது இந்த கல்குவாரி செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையினால் அந்த குட்டையில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இதையடுத்து சூர்யா, ஹரிவிக்னேஷ் உள்பட 6 பேரும் குட்டையில் இறங்கி குளித்தனர். அப்போது சூர்யா, ஹரிவிக்னேஷ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தனர். இதை பார்த்ததும் சக நண்பர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் சூர்யா, ஹரிவிக்னேஷ் ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பலியானார்கள்.
நண்பர்கள் அங்கிருந்து வேகமாக கந்தாஸ்ரமம் கோவிலுக்கு ஓடி வந்தனர். அங்கிருந்த பக்தர்களிடம் நடந்ததை கூறி அவர்களை அழைத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து செல்போன் மூலம் சூர்யா, ஹரிவிக்னேஷ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களும் அங்கு விரைந்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சூர்யா, ஹரிவிக்னேஷ் ஆகியோரது உடல்களை மீட்டனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் மற்றும் சேலம் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் ஹரிவிக்னேசின் உடலை அவருடைய பெற்றோர் வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து சூர்யாவின் உடலை மட்டும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துயர சம்பவம் நடந்த கல்குவாரி சன்னியாகுண்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. எனவே, இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்த அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம் போலீசாரிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுபற்றி தெரியவந்ததும் போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி உடனே மைக் மூலம் தொடர்புகொண்டு, சம்பவம் நடந்த இடத்தை இரு போலீசாரும் பார்வையிட்டு மேற்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மாணவர்கள் பலியான இடம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்டது என்பது உறுதியானது. இதையடுத்து மாலையில் ஹரிவிக்னேஷ் வீட்டுக்கு போலீசார் சென்றனர். பின்னர் பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாணவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் மாணவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி மாணவர்கள் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.