சேத்துப்பட்டு அருகே கால்வாயில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த ராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகள் சங்கீதவாணி (வயது 12), மகன் கோபால் (11). அதே பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவரது மகள் ரூபிணி (12).
சேத்துப்பட்டு,
சங்கீதவாணி, கோபால், ரூபிணி ஆகியோர் நேற்று சைக்கிளில் ராமபுரத்தில் இருந்து கோணமங்கலத்துக்கு விளையாட்டாக புறப்பட்டனர். அப்போது வழியில் கால்வாய் இருந்ததால் அவர்கள் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றனர். கால்வாயில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அதில் எதிர்பாராதவிதமாக சங்கீதவாணியும், ரூபிணியும் தடுமாறி விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கோபால் ஊருக்குள் ஓடிச்சென்று அங்கிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தான். உடனே பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து கால்வாயில் மூழ்கி இறந்த சங்கீதவாணியையும், ரூபிணியையும் பிணமாக மீட்டனர்.
பின்னர், கோணமங்கலம்–ராமபுரத்தை இணைக்கும் கால்வாயில் தரைப்பாலம் கட்டி தரக்கோரி சிறுமிகளின் உடல்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தரைப்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.