ஊட்டியில் மழைக்கு தார்ச்சாலை பெயர்ந்தது; கேரட் பயிர்கள் மழைநீரில் மூழ்கின
ஊட்டியில் பெய்த தொடர் மழைக்கு தார்ச்சாலை பெயர்ந்தது. கேரட் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஒகி புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் ஊட்டி–குன்னூர் சாலை, குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி–கோத்தகிரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஊட்டி நகரில் பெய்த கனமழையால் மிஷனெரி ஹில் பகுதியில் குடியிருப்புகள் அருகே உள்ள தார்ச்சாலை பெயர்ந்து தோட்டத்தில் சரிந்தது.இதனால் அங்கு பயிரிட்டு இருந்த மலைக்காய்கறிகள் சேதமடைந்தது. சாலையின் ஒரு பகுதி பெயர்ந்து உள்ளதால், அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து உள்ளனர். இதனை சரிசெய்யும் பணியில் நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி அருகே கேத்தி பாலாடா பகுதியில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட கேரட் பயிர்கள் மழைநீரில் மூழ்கின. மழை தொடர்ந்து பெய்ததால் நிலத்தில் இருந்து தண்ணீர் வடியவில்லை. கேரட் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் அதை பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர்.இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை இல்லை. காலையில் இருந்தே வெயில் அடித்ததை காண முடிந்தது. வெயில் அடிக்க தொடங்கி விட்டதால் கேரட் பயிரை மூழ்கடித்த மழைநீர் வற்ற தொடங்கியது.
இதற்கிடையே மழையின் காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் நடமாடியதை பார்க்க முடிந்தது. படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.அதேபோல் ஊட்டி–கூடலூர் சாலையில் உள்ள பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது.
Related Tags :
Next Story