அம்மாபேட்டை அருகே கல்லூரி பஸ்–மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு


அம்மாபேட்டை அருகே கல்லூரி பஸ்–மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 5 Dec 2017 3:15 AM IST (Updated: 5 Dec 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே கல்லூரி பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தார்கள்.

அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சித்தாறு கண்ணாங்கரடை சேர்ந்தவர் பெரியசாமி. டிராக்டர் டிரைவர். அவருடைய மனைவி சுமதி. இவர்களுடைய மகன் அரவிந்த் (வயது 21). சேலம் மாவட்டம் மேட்டூர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

பெரியசாமிக்கும், சுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுமதி கணவரை பிரிந்து மேட்டூர் அருகே உள்ள கோவில்பாளையத்தில் இருக்கும் தன் தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். அதனால் அரவிந்தும் தாயுடன் அங்கேயே தங்கிக்கொண்டு வேலைக்கு சென்றுவந்தார்.

இந்தநிலையில் சித்தாறில் உள்ள தந்தையை பார்க்க அரவிந்த் மோட்டார் சைக்கிளில் நேற்று மதியம் புறப்பட்டார். அப்போது அவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவருடைய மகன் சூர்யா (20) என்பவரையும் உடன் அழைத்து வந்தார்.

தந்தையை பார்த்த பிறகு அரவிந்த் நேற்று மாலை கோவில்பாளையத்துக்கு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார்.

மோட்டார்சைக்கிளை அரவிந்த் ஓட்டினார். சூர்யா பின்னால் உட்கார்ந்து இருந்தார். மாலை 6½ மணி அளவில் ஊமாரெட்டியூர் பிரிவு என்ற இடத்தில் சென்றுகொண்டு இருந்தார்கள். அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரி பஸ் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு முன்னால் சென்றது.

அந்த கல்லூரி பஸ்சை அரவிந்த் முந்திச்செல்ல முயன்றார். பஸ்சின் முன்பகுதியை நெருங்கும்போது, எதிரே ஒரு லாரி வந்தது. இதனால் மோட்டார்சைக்கிளை பஸ்சின் மீது உரசுவதுபோல் அவர் வளைக்கும்போது கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளும், பஸ்சும் மோதிக்கொண்டன. இதில் வண்டியில் இருந்து 2 பேரும் தூக்கிவீசப்பட்டார்கள். அப்போது படுகாயம் அடைந்ததில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சூர்யா உயிருக்கு போராடினார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே சூர்யாவும் இறந்தார்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story