ஆர்.கே. நகர் தொகுதியில், இன்று மனித எலும்பு தின்னும் போராட்டம் நடத்தப்படும் அய்யாக்கண்ணு பேட்டி
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் இன்று மனித எலும்பு தின்னும் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
திருச்சி,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நேற்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயத்திற்கான உற்பத்தி செலவை விட 50 சதவீதம் லாபம் கிடைக்கும் அளவில் விளை பொருட்களுக்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறோம். நவம்பர் மாதம் நடைபெற இருந்த பாராளுமன்ற கூட்டத்தின் போது பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதற்காக டெல்லி சென்றோம். ஆனால் பாராளுமன்ற கூட்டத்தையே தள்ளி வைத்து விட்டனர்.
போராட்டம் நடத்திய விவசாயிகளை பார்க்க கூட பிரதமர் மோடி வரவில்லை. எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மனித எலும்பு தின்னும் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.