ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 45 ரவுடிகள் கைது
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும், 45 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராயபுரம்,
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21–ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில், வட சென்னை கூடுதல் கமிஷனர் ஜெயராம் மேற்பார்வையில் தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், தலைமறைவாக இருந்த குற்ற பின்னணி கொண்ட 24 ரவுடிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மேலும், குற்ற பின்னணி கொண்ட 114 ரவுடிகளிடம் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டோம் என போலீசார் எழுதி வாங்கினர்.
அதையும் மீறி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஆர்.கே நகர் தொகுதியில் இருந்து தேர்தல் முடியும் வரை வெளியேற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 45 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.