தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி விட்டது: திருச்சி சிவா எம்.பி. பேட்டி


தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி விட்டது: திருச்சி சிவா எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 5 Dec 2017 4:30 AM IST (Updated: 5 Dec 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி விட்டது. 2–ம் இடத்துக்குத் தான் அங்கு போட்டி நடக்கிறது என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

புதுச்சேரி,

தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. புதுவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

மேடைப்பேச்சு மூலம் மாற்றங்களை ஏற்படுத்திய தலைவர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர் வழியில் தற்போது தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செம்மைப்படுத்தி வருகிறார். ஸ்டாலின் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். இயக்கத்தின் கொள்கைகளையும், நாட்டில் ஏற்பட வேண்டிய மாற்றத்தையும் சொற்பொழிவாளர்கள் மேடைகளில் எடுத்துக்கூறுவார்கள்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி உறுதியாகி விட்டது. 2–வது இடம் யாருக்கு என்பதற்காக ஆளுங்கட்சியும், மற்றவர்களும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மக்களும், வேறுபாடின்றி உயர் பொறுப்பில் இருப்பவர்கள் முதல் பாட்டாளி மக்கள் வரை இந்த ஆட்சியை அகற்றிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதற்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் அமையும்.

கன்னியாகுமாரியில் தற்போது வீசிய புயலால் மக்களின் வாழ்க்கை சின்னா பின்னமாகியுள்ளது. தொழிலுக்குச் சென்ற பலர் வீடு திரும்பவில்லை. அந்த நேரத்தில் மாநில முதல்–அமைச்சர் கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். மோசமான நிலையிலும் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது என்கிறார்கள். இந்த சின்னம் எம்.ஜி.ஆர். காலத்திலும் தோற்றுப்போய் உள்ளது. ஜெயலலிதா காலத்தில் அவரே தோற்றுப் போய் உள்ளார். நடைபெற உள்ள இடைத்தேர்தல் முடிவு இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். ஒரு ஆளுங்கட்சி இவ்வளவு மோசமான தோல்வியை தழுவியது இல்லை என்ற அளவுக்கு அ.தி.மு.க.வின் நிலைமை ஏற்படும்.

நடிகர் விஷால் போட்டியிடுவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜனநாயக நாட்டில் தேர்தல் நேரத்தில் சுயேட்சைகள் நிறைய போட்டியிடுவார்கள். ஆனால் தேர்தலில் மக்கள் வாக்களிப்பு என்பது நமக்காக யார் உழைப்பார்கள், குரல் கொடுப்பார்கள், கடந்த காலத்தில் யார் பாடுபட்டிருக்கிறார்கள் என்பது பற்றியதாகும். அது கட்சியின் அடிப்படையிலும், கொள்கையின் அடிப்படையிலும் ஒருவரது உழைப்பின் தகுதியின் அடிப்படையில் தான் அமையும். அந்த வகையில் நாங்கள் மிகச்சிறப்பான வெற்றி வாய்ப்போடு இருக்கிறோம்.

புதுச்சேரியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற தெளிவோடு தன்னுடைய கடமையை உணர்ந்து செயல்படுகிறார். இதனால் அரசின் செயல்பாடுகளில் கவர்னர் தலையீடு அத்துமீறியது என்று சொல்லும் உணர்ச்சி அவருக்கு இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இருப்பவர்கள் யாருடைய தயவிலோ ஆட்சியில் இருக்கிறார்கள். முதலில் ஒருவரது தயவில் ஆட்சிக்கு வந்தவர்கள். தற்போது இன்னொருவரின் தயவில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, வைகோ ஆதரவு தெரிவித்ததை ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இந்த ஆட்சி அகன்றிட வேண்டும் என்று கருத்து அரசியல் கட்சிகளிடம் வலிமை பெற்று வருவது ஆரோக்கியமான அறிகுறியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story