நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் உண்ணாவிரதம்
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி குரும்பாபேட் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள ஊழியர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை சி.ஐ.டி.யூ. மற்றும் என்.ஆர். தொழிற்சங்கம் சார்பில் அறிவியல் நிலையத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். என்.ஆர்.டி.யூ.சி. செயலாளர் இளையபெருமாள் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினக்கூலி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 40 மாத சம்பளத்தை வழங்க வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 4 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் தங்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கவில்லை என்றால் வருகிற 11–ந் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர்.