குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2017 4:30 AM IST (Updated: 5 Dec 2017 11:31 PM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி, சூரமடை ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக 3 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. ஆனால், அதில் உள்ள மோட்டார்கள் மூலம் முறையாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படுவதில்லை, காவிரி குடிநீரும் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடுப்பட்டியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், நடுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், குடிநீர் திறப்பவர் முறையாக தண்ணீரை திறந்து விடாமல் ஏதாவது ஒரு காரணத்தை கூறி குடிநீர் திறப்பதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறோம். குடிநீர் திறப்பவரை மாற்ற வேண்டும், மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு அதிகாரிகள், உங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வட மாவட்டம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் பிரதான சாலை திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகும். தற்போது அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பலரும் மாலை அணிந்து செல்வதால் அதிக அளவில் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். நேற்று சாலை மறியல் நடந்ததால் அதிக அளவிலான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதில் பெரும்பாலானவை அய்யப்ப பக்தர்கள் சென்ற வாகனங்கள் ஆகும்.


Next Story