‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது


‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது
x
தினத்தந்தி 6 Dec 2017 4:45 AM IST (Updated: 6 Dec 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் புயல், வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று வந்தார். சுசீந்திரம் பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இந்திரா காலனி பகுதியை பார்வையிட்டு, அந்த பகுதியைச் சேர்ந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மக்கள் கூறிய குறைகளை அவர் குறிப்பெடுத்துக் கொண்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:-

குமரி மாவட்டத்தை புயலும், மழையும் தலை கீழாக்கிவிட்டது. நவம்பர் 20-ந் தேதியே புயல் எச்சரிக்கை கொடுத்து விட்டோம் என்று அரசு கூறுவது ஏற்புடையது அல்ல. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு பேரழிவு ஏற்படும் என்று தெளிவாக எச்சரிக்கை செய்திருக்க வேண்டியது அரசின் கடமை. இதை செய்ய தவறியதால் மீனவர்கள் கடலில் தத்தளிக்கிறார்கள். கடற்கரை நெடுகிலும் அழுகுரல்தான் கேட்கிறது. தேர்தல் காலக்கட்டத்தில் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவி வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் இதுவரையிலும் வழங்கவில்லை. ஹெலிகாப்டர் தளம் அமைத்திருந்தாலாவது மீனவர்களை எளிதில் தேடி மீட்டு இருக்கலாம். இவற்றில் எதையும் அரசு செய்யவில்லை.

ஒகி புயலால் வீடுகள், நெல் பயிர்கள், ரப்பர் மற்றும் வாழைகள் கடுமையாக சேதம் அடைந்து உள்ளன. அவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் மாவட்டமே இருளில் மூழ்கியுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு மின் வினியோகம் வழங்க வேண்டும்.

புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சேதம் அடைந்த படகுகளுக்கும் இழப்பீடு வழங்குவது அவசியம். கேரளாவை புயல் தாக்கியதும் அந்த மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டது. ஆனால் தமிழக அரசு, புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த தவறிவிட்டது.

இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் பாதிப்படைந்த பல்வேறு இடங்களுக்கு சென்று சேதங்களை பார்வையிட்டார். ஒகி புயலால் கடலில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். குளச்சல் துறைமுகத்திற்கு சென்ற வைகோவிடம் மீனவர்கள் சார்பில் பங்குதந்தை எட்வின் வின்சென்ட் கோரிக்கைகளை அடங்கிய மனுவை வழங்கினார். 

Next Story