போலீசார் குறைவு பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ் எல்லை இரண்டாக பிரிக்கப்படுமா?


போலீசார் குறைவு பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ் எல்லை இரண்டாக பிரிக்கப்படுமா?
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லையை இரண்டாக பிரித்து கூடுதலாக ஒரு போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 2006–ம் தொடங்கப்பட்ட நாள் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நிகழ்ந்து வந்த விபத்துகள் குறித்த வழக்குகளை மட்டுமே இங்கு விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதன் பிறகு நகரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த போலீஸ் நிலையத்தின் எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது பூந்தமல்லி, நசரத்பேட்டை, மாங்காடு, குன்றத்தூர், போரூர், திருவேற்காடு, அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், திருமுல்லைவாயல், ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி, பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர் ஆகிய 15 போலீஸ் நிலைய எல்லையில் நிகழும் விபத்துகள் குறித்த வழக்குகளையும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் விரிவுபடுத்தப்பட்ட எல்லைக்கு ஏற்ப இங்கு போலீசாரின் எண்ணிக்கை இல்லை. இந்த போலீஸ் நிலையத்தில் தற்போது வரை உதவி கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர், 9 சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 32 போலீசார் மட்டுமே உள்ளனர். இந்த போலீசார் எண்ணிக்கை போதாது என இங்கு பணிபுரியும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பூந்தமல்லி–புழல் நெடுஞ்சாலை, பூந்தமல்லி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை என 2 தேசிய நெடுஞ்சாலைகள், 2 மாநில நெடுஞ்சாலைகள் ஆகிய 4 நெடுஞ்சாலைகள் இந்த போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குள் வருகிறது.

இந்த போலீஸ் நிலைய எல்லையில் ஒரு மாதத்தில் 100 முதல் 120 வரை சிறு மற்றும் பெரு விபத்துகள் ஏற்படுகிறது. அதில் சராசரியாக 20 முதல் 30 உயிரிழப்புகளும் நடக்கிறது. அதாவது நாள் ஒன்றுக்கு ஒருவர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை சாலை விபத்தில் 280 பேர் பலியாகி உள்ளனர். 1,379 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

கடந்த சில மாதங்களாக நடந்த சாலை விபத்துகளில் பெரும்பாலான விபத்துகள், சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பின்னால் வந்த வாகனம் மோதியே நடந்து உள்ளது. இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். இதை தவிர்க்க, சாலையோரம் வாகனங்களை நிறுத்தப்பட்டு உள்ளனவா? என்பதை கண்காணிக்க நெடுஞ்சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட கூட போலீசார் போதுமானதாக இல்லை.

எல்லைகள் அதிகம் என்பதால் விபத்து நடக்கும் இடத்துக்கும், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்துக்கும் மிகுந்த தூரம் உள்ளது. இதனால் விபத்து நடந்ததாக தகவல் வந்தவுடன் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்றாலும் இடையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சம்பவ இடத்துக்கு சென்றடைய குறைந்தபட்சம் 1 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது.

குறிப்பாக ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் விபத்து நடந்ததாக தகவல் வந்தால், போக்குவரத்து போலீசார் அங்கு செல்ல நீண்ட நேரம் ஆகி விடுகிறது. இதனால் சில நேரங்களில் விபத்தில் சிக்கியவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருக்க வேண்டியது உள்ளது. இறந்து விட்டால் அவர்களின் உடல் போலீசார் வரும்வரை அப்படியே கிடக்கும் சூழல் உள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் விபத்து நடந்தால், விபத்தில் சிக்கிய வாகனத்தை வேறு வாகனத்தில் வைத்து பூந்தமல்லி கொண்டுவரப்படுகிறது. அதனை திருப்பி எடுத்து செல்ல அந்த வாகனங்களின் உரிமையாளர்கள், மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களும், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வந்து புகார் அளித்து விட்டு, பிரேத பரிசோதனை செய்ய போலீசாரை அழைத்து செல்ல பூந்தமல்லி வர வேண்டும். அது தொடர்பாக வழக்கு நடந்தாலும், வேறு ஏதாவது தகவல் வேண்டுமானாலும் இங்குதான் வந்து அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நீண்ட தூரம் வரவேண்டும் என்பதாலும், நேரம் விரயம், பணம் செலவு உள்ளிட்ட காரணங்களாலும் விபத்துகளில் சிக்கிய வாகனங்களை அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனாலேயே அதிக அளவிலான வாகனங்கள் பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ் நிலைய வளாகத்தில் தேங்கி கிடக்கின்றன.

வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு விபத்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்த போலீஸ் நிலைய எல்லையில் விபத்துகள் நிகழும்போது விசாரிப்பதற்கும், உயிரிழப்புகள் நேரிட்டால் உடல்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கவும், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகவும் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து போலீசார் செல்ல வேண்டியது உள்ளது.

போலீசார் எண்ணிக்கை குறைவு, அதிக பணிச்சுமையால் தற்போது உள்ள போலீசார் திணறி வருகின்றனர். வாடகை கட்டிடத்தில் இயங்கும் இந்த போலீஸ் நிலையத்தில் போதிய இடவசதி, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. விபத்துகளில் சிக்கும் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்த போதிய இட வசதி இல்லாமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த போலீஸ் நிலையத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

பணிச்சுமையால் சிறிய விபத்துகள் குறித்த புகார்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவது இல்லை என்றும், ஆள் பற்றாக்குறையால் ஏராளமான வழக்குகள் தேங்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே போலீசாருக்கு பணிச்சுமை, பொதுமக்களுக்கு அலைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலைய எல்லையை இரண்டாக பிரித்து ஆவடி அல்லது அம்பத்தூர் பகுதியை மையமாக கொண்டு புதிதாக ஒரு போக்குவரத்து போலீஸ் நிலையம் உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.


Next Story