கூடுவாஞ்சேரி: அ.தி.மு.க. பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை


கூடுவாஞ்சேரி: அ.தி.மு.க. பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2017 5:30 AM IST (Updated: 6 Dec 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 46). நந்திவரம் பேரூராட்சி பேரூர் அ.தி.மு.க. பொருளாளராக இருந்தார். இவர் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வந்தார்.

தமிழ்ச்செல்வன் நேற்று இரவு கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே உள்ள தன்னுடைய அலுவலகத்தை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது வேகமாக வந்த ஒரு கார், தமிழ்ச்செல்வனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தடுமாறி தமிழ்ச்செல்வன் கீழே விழுந்தார். உடனே 5 பேர் கொண்ட கும்பல் திபுதிபுவென காரில் இருந்து இறங்கி தமிழ்ச்செல்வனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தமிழ்ச்செல்வன் தப்பிக்க ஓடினார்.

எனினும் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டிச்சென்று ஒரு வீட்டின் முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் வைத்து மீண்டும் வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பின்னர் அந்த கும்பல் அதே காரில் தப்பி சென்றது.

இது பற்றி தகவல் அறிந்த வண்டலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குருசாமி, கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தமிழ்ச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சில மாதங்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வன் தன்னுடைய கார் டிரைவர் அருளை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. எனவே முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது தொழில் பிரச்சினையா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 5 பேர் கொண்ட கும்பல் தமிழ்ச்செல்வனை விரட்டி, விரட்டி வெட்டியது பதிவாகி இருந்தது. அதை வைத்து அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story