அம்பை நகரசபை அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்


அம்பை நகரசபை அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2017 4:06 AM IST (Updated: 6 Dec 2017 4:06 AM IST)
t-max-icont-min-icon

அம்பை நகரசபை அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை நகரசபை 6–வது வார்டு புதுக்கிராமம் தெருவில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், அந்த பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் கடந்த ஓராண்டாக கழிவு நீர் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நகரசபை நிர்வாகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50–க்கும் மேற்பட்டோர் திரண்டு அம்பை நகரசபை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது நகரசபையில் ஆணையாளர் இல்லாததால், பணி மேற்பார்வையாளர் சரவணன், ஊழியர்கள் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சமீபத்தில் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கோடாரங்குளம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. உடைப்பு சரிசெய்யப்பட்டதும் குடிநீர் வினியோகிக்கப்படும். மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது குறித்து உடனடியாக ஆய்வு செய்து சீர்செய்யப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story