சினிமா பைனான்சியர் அன்புசெழியன் நீலகிரியில் பதுங்கலா? போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
நீலகிரி மாவட்டத்தில் சினிமா பைனான்சியர் பதுங்கி இருக்கிறாரா? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி,
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் (வயது 43). இவர் சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் சசிகுமார் நடத்தி வரும் கம்பெனி புரொடக்ஷன் நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்து வந்தார்.
சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி கட்டியும், கடன் தீராமல் கந்து வட்டி கொடுமையால் அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் பைனான்சியர் அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். சினிமா பைனான்சியர் அன்புசெழியன் எங்கு உள்ளார்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அன்புசெழியன் பெங்களூருவில் இருப்பதாக வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் வந்ததன் அடிப்படையில், அங்கு விசாரணை நடத்தினர். ஆனால் அன்புசெழியன் பெங்களூருவில் இருந்து மைசூர் வழியாக கூடலூர், மசினகுடி ஆகிய பகுதிகளில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று கூடலூர், மசினகுடி போலீசார் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள குடில்களில் சோதனை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் மசினகுடியை அடுத்துள்ள கல்லட்டி பகுதியில் உள்ள தனியார் தங்கும் சொகுசு விடுதி மற்றும் ஊட்டி, லவ்டேல், பெர்ன்ஹில், கேத்தி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள், ஓட்டல்களில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் பதுங்கி உள்ளாரா? என நீலகிரி மாவட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது, போலீசார் தங்களது செல்போன்களில் அன்புசெழியன் புகைப்படத்தை வைத்து ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களிடம் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் வாகன சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.