பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தபால் அலுவலகம் முற்றுகை கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும் நடந்தது


பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தபால் அலுவலகம் முற்றுகை கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும் நடந்தது
x
தினத்தந்தி 7 Dec 2017 4:30 AM IST (Updated: 7 Dec 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று வேலூரில் தபால் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

வேலூர்,

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோட்டை உள்பட முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் கோட்டைக்கு வந்தவர்களின் பொருட்களை போலீசார் சோதனை செய்து அனுப்பினர். கோவில் வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை நடத்தினர்.

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முகமத் ஜாபர் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் வசீம் அக்ரம், மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் அப்சர் சையத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணாகலையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் ஏஜாஸ் அகமது தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, குன்னங்குடி அனீபா ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

அதேபோன்று மண்டித்தெருவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் முகமது அசாத் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அமீர்ஹம்சா, வேலூர் மண்டல தலைவர் இக்பால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஷேக்மீரான் நன்றி கூறினார். 

Next Story