மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
திருப்பூர் போயம்பாளையத்தில் மின்வாரிய அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டதால், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகரில் ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இதுதொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் போதுமான பணியாளர்களை நியமிக்க கோரியும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் உயர் அதிகாரிகள் செல்போன் எண்ணுடன் ஒரு பதாகையும், அந்த அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி அதை கண்டித்து ஒரு பதாகையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் போயம்பாளையம் கிளை சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு வைக்கப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் இரவோடு இரவாக அந்த 2 பதாகைகளும் திடீரென அங்கிருந்து அகற்றப்பட்டன. மறுநாள் காலை பதாகைகள் அங்கிருந்து மாயமானது கண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரித்தனர். அப்போது பதாகைகள் மின்வாரிய அலுவலகத்தின் மாடியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று மாலை போயம்பாளையம் கிளை செயலாளர் சசி, வட்டார குழு உறுப்பினர் விஜய் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த உதவி பொறியாளர் துரைபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பதாகைகள் மின்வாரிய அலுவலக மாடியில் இருப்பது குறித்து கேட்டனர். ஆனால் அவர்கள் முறையாக பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அனுப்பர்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பதாகைகள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரியாமல் அலுவலக மேல்மாடியில் இருக்க முடியாது என்றும், அதை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவினாசி செயற்பொறியாளர் பாலன் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் முறைகேடுகள் புகார் உள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதாகைகளை அகற்றியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும் போலீசார் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆர்.கே.நகர். மின்வாரிய அதிகாரிகளை அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.