திருபுவனை தொகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும் கோபிகா எம்.எல்.ஏ. கோரிக்கை


திருபுவனை தொகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும் கோபிகா எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2017 3:45 AM IST (Updated: 7 Dec 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனை தொகுதியில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும் என்று உள்ளாட்சி துறை இயக்குனரிடம் கோபிகா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனை தொகுதியில் மதகடிப்பட்டு வாரச்சந்தையை ரூ.14¼ லட்சம் மதிப்பில் காய்கறி அங்காடி அமைக்க கடந்த மே மாதம் பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் இதுநாள் வரை கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதேபோல் தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இப்பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோபிகா, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் வலியுறுத்தினார். ஆனால் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக உள்ளாட்சித்துறை இயக்குனரை கோபிகா எம்.எல்.ஏ. சந்தித்து தனது தொகுதிக்கு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–

மதகடிப்பட்டு வாரச்சந்தையில் சாலையோரம் காய்கறி விற்பனை செய்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் காய்கறி விற்பனை அங்காடி அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கோரப்பட்ட நிதி ஒதுக்கி, கட்டுமான பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மையில் பெய்த தொடர் மழையால் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட திருவண்டார்கோவில், கொத்தபுரிநத்தம், கலிதீர்த்தாள்குப்பம், திருபுவனை, வம்புபட்டு, சன்னியாசிகுப்பம், திருபுவனை பாளையம் ஆகிய பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story