போலீசாருக்கு போக்கு காட்டிய குற்றவாளி


போலீசாருக்கு போக்கு காட்டிய குற்றவாளி
x
தினத்தந்தி 8 Dec 2017 11:00 AM IST (Updated: 7 Dec 2017 2:03 PM IST)
t-max-icont-min-icon

பல கோடி மக்கள் வாழ்கின்ற இவ்வுலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வித்தியாசமான உடல் அமைப்பும், குணமும் உண்டு.

ல கோடி மக்கள் வாழ்கின்ற இவ்வுலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வித்தியாசமான உடல் அமைப்பும், குணமும் உண்டு. கை விரல் ரேகைகளும், கண்களின் அமைப்பும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவம் வாய்ந்த முறையில் அமையப் பெற்றிருக்கும். அதே போன்று, ஒரு சில தனித்தன்மை கொண்ட செயல்பாடுகளும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் காணப்படும். இந்த தனித்தன்மையின் காரணமாக ஒவ்வொரு குற்றவாளியும் ஒரு குறிப்பிட்ட ‘குற்றச் செய்முறை’ (modus operandi) யில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைப் பல நேரங்களில் காண முடிகிறது.

 இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் திருடர்கள் பெரும்பாலும் அவ்வகையான திருட்டுச் செயலில்தான் ஈடுபடுவார்கள். அதே போன்று, பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பி திருடுபவர்கள், வழிப்பறியில் ஈடுபடுபவர்கள், வாகனங்களைத் திருடுபவர்கள் அவரவருக்குக் கைவந்த குற்றச் செய்முறையில்தான் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவார்கள்.

சில ஆண்டுகளாகத் தொடர்ந்து பல இடங்களில் திருட்டுக் குற்றங்கள் புரிந்து வந்த ஒரு குற்றவாளியைக் குற்றச் செய்முறையை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் எப்படி அடையாளம் கண்டுபிடித்தனர் என்பது குறித்தும், அந்த குற்றவாளியைப் பிடிப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்தும் இந்த வாரம் பார்ப்போம்.

 2015–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு நாள்.. அலுவலகத்தில் பணியில் இருந்த திருநெல்வேலி நகர காவல் ஆணையருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

 ‘நேற்று இரவில் வண்ணாரப்பட்டையில் உள்ள ஒரு துணிக்கடையில் திருட்டு நடந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு என்ன? குற்றவாளிகள் யார் என்று துப்பு கிடைத்துள்ளதா?’ – என்று சென்னையில் பணிபுரிந்து வரும் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி காவல் ஆணையரிடம் தொலைபேசியில் கேட்டார். அப்படி ஒரு திருட்டு வழக்கு குறித்து அதுவரை காவல் நிலையத்திற்கோ அல்லது உள்ளூர் போலீஸ் அதிகாரிகளுக்கோ தகவல் எதுவும் வரவில்லை. ‘நடந்தது என்ன?’ என்று விசாரித்து வர, திருட்டு நடந்ததாகக் கூறப்பட்ட அந்த பிரபல துணிக்கடைக்கு உடனடியாக ஒரு போலீஸ் அதிகாரியை அனுப்பி வைத்தார் காவல் ஆணையர்.

 இது போன்ற இக்கட்டான சந்தர்ப்பங்களை உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சில சமயங்களில் சந்திக்க நேரிடுகிறது. செல்வாக்கு மிகுந்த நபர்கள் சிலர் அவர்களது வீட்டிலோ அல்லது நிறுவனத்திலோ திருட்டு நடந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குத் தகவல் தெரியப்படுத்தாமல், தங்களுக்குத் தெரிந்த உயர் போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல் தெரியப்படுத்தி விடுவார்கள். உயரதிகாரிகளின் தலையீடு இருந்தால்தான், உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகள் திருட்டு சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து, சிரத்தையுடன் புலன் விசாரணை மேற்கொண்டு, களவு போன பொருட்களை மீட்டுக் கொடுப்பார்கள் என்பது அவர்களது கருத்து. அத்தகைய கருத்து பொய்யானது என்று உதாசீனப்படுத்திவிடவும் முடியாது. அதே சமயத்தில், அச் செய்கையால் உள்ளூர் போலீஸ் அதிகாரிகளுக்கும், புகார்தாரர்களுக்கும் சில சமயங்களில் நெருடல் ஏற்பட்டு, அது புலன் விசாரணையின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் உண்டு.

 அந்த துணிக்கடைக்குச் சென்ற உள்ளூர் போலீஸ் அதிகாரி மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவல் இதுதான்:

‘வழக்கம் போல் காலையில் துணிக்கடையின் நிர்வாகிகள் பூட்டைத் திறந்து, உள்ளே சென்று பார்த்த பொழுது, கடையின் ஒவ்வொரு தளத்திலும் இருந்த பணப்பெட்டிகள் திறக்கப்பட்டிருந்தன. அவைகளில் வைக்கப்பட்டிருந்த பணம் களவாடப்பட்டிருந்தது. கீழ் தளத்தில் அமைந்துள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திலிருந்து கைக்கடிகாரங்களும் களவாடப்பட்டிருந்தன. களவு போன பணம் மற்றும் பொருட்களின் மதிப்பை உடனடியாகக் கணக்கிட முடியவில்லை’.

 இந்த தகவலின் அடிப்படையில், குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக திருட்டு நடைபெற்ற துணிக்கடை பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

‘இரவு நேரப் பாதுகாப்புக்காக, அந்த துணிக்கடையின் வெளி புறத்தில் செக்யூரிட்டிகள் நேற்றிரவு பணியில் இருந்துள்ளனர். துணிக்கடையின் வெளிப்புற கதவுகள் அனைத்தும் பூட்டியவாறு இருக்கும் பொழுது, திருடன் எப்படி உள்ளே சென்றிருக்க முடியும்? கடையில் வேலைபார்க்கும் பணியாளர்கள் சிலரது செயலாக இது இருக்கலாம்’ – என்பது முதற்கட்ட புலன் விசாரணை மேற்கொண்ட போலீசாரின் கருத்து.

 ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் கைவிரல் ரேகை நிபுணர்கள் குழு செயல்பட்டு வருகிறது. திருட்டு சம்பவம் நிகழ்ந்ததாக காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததும், காவல் நிலையத்திலிருந்து கைவிரல் ரேகை நிபுணர்களுக்கும், மோப்பநாய் பிரிவுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படும். கைவிரல் ரேகை நிபுணர்களும், மோப்ப நாய் படையும் திருட்டு நடைபெற்ற இடத்திற்கு வரும் வரை சம்பவ இடத்தை உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.

 இந்த துணிக்கடையில் நிகழ்ந்த திருட்டு குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்தை ஆய்வு செய்ய கை விரல் ரேகை நிபுணர்கள் வந்தனர். அவர்களிடம், ‘துணிக்கடைக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் நேற்று வந்திருப்பார்கள். அவர்களது விரல் ரேகை பதிவுகள் துணிக்கடையின் அனைத்து தளங்களிலும் ஆங்காங்கு காணப்படும். அவைகளில் இருந்து எதைக் குற்றவாளிகளின் விரல் ரேகைகள் என வகைப்படுத்த முடியும்?’ என்று புலனாய்வு போலீசார் தங்களது கருத்தை விரல் ரேகை நிபுணர்களிடம் வெளிப்படுத்தினர். அர்த்தம் பொதிந்த புலனாய்வு போலீசாரின் இந்த கருத்தை உள்வாங்கிக் கொண்ட விரல் ரேகை நிபுணர்கள் அவர்களது கடமையைச் செய்யத் தொடங்கினர். துணிக்கடையின் அனைத்து தளங்களையும் அவர்கள் கவனத்துடன் ஆய்வு செய்தனர். நான்காவது தளத்தின் கூரையில் வேயப்பட்டிருந்த இரும்பு தகடுகள் நீக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு கயிறு கட்டிடத்திற்குள் தொங்கிக் கொண்டிருந்ததை விரல் ரேகை நிபுணர்கள் பார்த்தனர். அந்த கயிற்றின் வழியாகத்தான் திருட்டு குற்றவாளிகள் துணிக் கடையின் மேல்தளத்திற்குள் இறங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது. அந்த இடத்திலிருந்த விரல் ரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்து கொண்டனர்.

 இதற்கிடையில், துணிக்கடையின் வெளிப்புற பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவின் பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்த பொழுது கிடைத்த சில படக்காட்சிகள் புலன் விசாரணைக்கு வழிகாட்டின. துணிக்கடையின் வெளிப்புறத்தில் தரையிலிருந்து மேல்தளம் வரை சுவற்றை ஒட்டினாற்போல் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப் வழியாக ஒரு நபர் நள்ளிரவில் தரைத்தளத்திலிருந்து மேலே ஏறிச் செல்லும் காட்சிதான் அது. அந்த நபர்தான் துணிக்கடையின் மேல்தளத்திற்குச் சென்று, கூரையில் வேயப்பட்டிருந்த இரும்பு தகடுகளின் சில பகுதிகளை அகற்றிவிட்டு, கயிறு மூலம் துணிக்கடையின் உள்ளே இறங்கி, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்; திருட்டு செயலை முடித்து விட்டு, வந்த வழியாகவே கடையிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும் என்று புலனாய்வு போலீசார் முடிவு செய்தனர்.

 ஒவ்வொரு தளத்திலும் இருந்த பணப் பெட்டிகள் மற்றும் கீழ் தளத்திலிருந்த அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் பகுதியில் இருந்த கண்ணாடி ஷோகேஸ்கள் ஆகியவைகளில் இருந்து விரல் ரேகை தடயங்களை நிபுணர்கள் பதிவு செய்து கொண்டனர். பதிவு செய்யப்பட்ட விரல் ரேகை தடயங்களுடன் அவர்களது அலுவலகம் சென்ற விரல் ரேகை நிபுணர்கள், அவைகளை ஆய்வு செய்தனர். கயிறு வழியாக திருடன் துணிக்கடைக்குள் இறங்கிய மேல் தளத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட சில விரல் ரேகை தடயங்கள், கீழ் தளத்திலுள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் பகுதியில் இருந்து பதிவு செய்யப்பட்ட சில விரல் ரேகை தடயங்களுடன் ஒத்திருந்தன. அவ்வாறு ஒத்திருந்த விரல் ரேகையானது திருட்டு குற்றவாளியின் விரல் ரேகையாக இருக்கலாம் என்ற சந்தேகம் விரல் ரேகை நிபுணர்களுக்கு ஏற்பட்டது.

 பல்வேறு இடங்களில் தினசரி நிகழும் திருட்டு வழக்குகளின் குற்ற செய்முறைகளையும் திருட்டு நிகழ்ந்த இடத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட விரல் ரேகை பதிவுகளையும் உடனுக்குடன் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள மாவட்ட விரல் ரேகை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முறையைக் காவல்துறை பின்பற்றி வருகிறது. இந்த தகவல் பரிமாற்றத்தினால், பிற மாவட்டங்களில் எந்தவிதமான குற்ற செய்முறைகளைப் பயன்படுத்தி, திருட்டு சம்பவங்கள் நிகழ்கின்றன என்பதை அனைத்து மாவட்டங்களில் உள்ள விரல் ரேகை நிபுணர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது. அனுபவம் மிகுந்த விரல் ரேகை நிபுணர்கள் ஒரு திருட்டுக் குற்றம் நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டதும், இதே போன்ற குற்ற செய்முறைகளில் எங்கெங்கு திருட்டுக் குற்றங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன என்றும், அவ்வகையான திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு காவல் துறையின் பார்வைக்கு யார் யார் வந்துள்ளனர் என்பதையும் கூறிவிடுவார்கள்.

 இந்த துணிக்கடையில் நிகழ்ந்த திருட்டு சம்பவத்தை முழுமையாகப் பார்வையிட்டு, ஆய்வு செய்த கைரேகை நிபுணருக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளியின் செயல்பாடுகள் நினைவுக்கு வந்தன. அந்த குற்றவாளி கடந்த இரண்டு ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருந்தான். பொதுவாக துணிக்கடைகளைத் தேர்வு செய்து, இரவு நேரத்தில் கடையின் மேற்கூரை வழியாக கடையினுள் சென்று திருடுவது அவனது குற்ற செய்முறை ஆகும். கூட்டாளிகள் யாரையும் அவன் துணைக்கு அழைத்துச் செல்ல மாட்டான். அந்த திருட்டு குற்றவாளியின் விரல் ரேகைகளோடு, இந்த துணிக்கடையில் இருந்து பதிவு செய்யப்பட்ட விரல் ரேகைகளை நிபுணர் ஒப்பிட்டுப் பார்த்தார். அவரது யூகம் சரியாக இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த குற்றவாளிதான் இந்த துணிக்கடை திருட்டில் ஈடுபட்டுள்ளான் என்பதை விரல் ரேகை நிபுணர் உறுதிப்படுத்தினார்.

 விரல் ரேகையைக் கொண்டு அடையாளம் காணப்பட்ட அந்த திருட்டுக் குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவனது நடவடிக்கைகள் மற்றும் தங்கும் இடம் குறித்து ரகசிய தகவல்கள் திரட்டப்பட்டன. பகல் நேரங்களில் அவனது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்றும், நள்ளிரவுக்குப் பிறகு கிராமத்தில் உள்ள அவனது வீட்டுக்கு வந்து தங்குவான் என்றும், அப்படி தங்கும் பொழுது, வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, உள்ளே தங்கியிருப்பான் என்ற தகவலும் தனிப்படை போலீசாருக்குக் கிடைத்தது.

 அந்த திருட்டு குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை போலீசார் நாள் குறித்தனர். ஒரு நாள் நள்ளிரவுக்குப் பிறகு, அனுபவமிக்க போலீசார் அடங்கிய தனிப்படையினர் அவனது கிராமத்திற்குச் சென்றனர். அவனது வீடு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்றால் அவனைப் பிடித்து விடலாம் என்று போலீசார் வியூகம் அமைத்தனர். கையில் கொண்டு வந்திருந்த ஒரு இரும்புக் கம்பியைக் கொண்டு, பூட்டின் மீது ஓங்கி அடித்தார் ஒரு போலீஸ்காரர். அந்த இரும்புக் கம்பி பூட்டின் மீது பட்டதும், ‘அம்மா’ என்ற அலறல் சத்தத்துடன் அந்தப் போலீஸ்காரர் தூக்கி வீசப்பட்டார். அந்த வீட்டைச் சுற்றி காவல் காத்துக் கொண்டிருந்த போலீசார் வீட்டின் முற்றத்திற்கு ஓடி வந்து, ‘என்ன நடந்தது?’ என்று விசாரித்தனர். யாரும் எதிர்பாராத வகையில் வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்த கதவில் பொறுத்தப்பட்டிருந்த பூட்டில் மின்சாரக் கம்பி இணைக்கப்பட்டு, அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இரும்புக் கம்பி கொண்டு பூட்டை உடைக்க முயற்சி செய்த போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சல சலப்பில் வீட்டின் கூரையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த திறந்த பகுதி வழியாக, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அந்த குற்றவாளி தனிப்படை போலீசாருக்குப் போக்கு காட்டிவிட்டு, தப்பி ஓடி விட்டான்.

 இச்சம்பவம் போலீசாருக்கு ஒரு படிப்பினையாக அமைந்துவிட்டது. துணிக்கடை திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை ஒருவார காலத்திற்குள் அடையாளம் கண்டுபிடித்து, அவனைப் பிடிக்க போலீசாருக்குப் பேருதவியாக இருந்த விரல் ரேகை நிபுணர் கோபாலகிருஷ்ணனின் திறமையை பாராட்டி அரசாங்கம் அவருக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கி கவுரவப்படுத்தியது.

 கை தேர்ந்த குற்றவாளிகள் எப்போதும் போலீசாரைக் காட்டிலும் வித்தியாசமான முறையில் சிந்தித்து செயல்படுவதால், பல சமயங்களில் அவர்களைப் போலீசாரால் பிடிக்க முடிவதில்லை. குற்றவாளிகளின் திறமை மற்றும் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ற முறையில் வியூகம் அமைத்து செயல்பட்டால், குற்றவாளிகளைத் தங்களது வளையத்திற்குள் போலீசார் கொண்டு வர முடியும்.

–விசாரணை தொடரும்.

Next Story